mardi 3 juillet 2012

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்ட கலந்துரையாடல் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன்

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட இருக்கின்ற நிலையில், வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கும், தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமாகவும், கட்சியின் கிராமிய அமைப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உயர்மட்ட உறுப்பினர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய விஷேட கலந்துரையாடல் எதிர்வரும் 04ம் திகதி கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைப் பணியகத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 07 ஆசனங்களை தனதாக்கிக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்குள் அதிக ஆசனங்களைப் பெற்றதன் விளைவாக முதலமைச்சர் பதவியையும், அதனுடன் இணைந்த விவசாயம், மீன்பிடி அமைச்சினையும் பெற்று மக்கள் எந்த நோக்கத்திற்காக வாக்களித்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருந்தது. இம் முறையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உயர் மட்ட கலந்துரையாடலின்படி மக்களின் ஆணையுடன் சந்திரகாந்தனுக்கே மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் உறுதியாக உள்ளது.
இம் முறை அதிகமான வேட்பாளர்கள் கட்சியில் இணைந்து தேர்தல் கேட்க விருப்பம் தெரிவித்த நிலையில், மட்டக்களப்பு, பட்டிருப்பு தேர்தல் தொகுதிகளில் இரு உயர்மட்ட கல்வி அதிகாரிகளை களம் இறக்குவதற்கும் கட்சியில் முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண மக்களுக்கான அரசியல் அதிகாரங்களை தொடர்ந்தும் வழங்குவதற்கும், கிழக்கு மக்களின் அபிவிருத்திக்காகத் தொடந்தும் பாடுபடுவதற்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்ந்தும் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire