mardi 24 juillet 2012

மகிந்த ராஜபக்சவிடம் இருந்தே முதல் வாழ்த்து – கொழும்பு வருமாறும் அழைப்பு பிரணாப் முகர்ஜிக்கு

இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மலர்க்கொத்து அனுப்பி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றதாக நேற்றுமுன்தினம் மாலை அறிவிக்கப்பட்டது. 

அவரது வெற்றி அறிவிக்கப்பட்டதும், உடனடியாகவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தொலைபேசி மூலம் அழைத்து, பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், மலர்க்கொத்து ஒன்றையும் அவரது வசிப்பிடத்துக்கு அனுப்பி வைத்திருந்தார். 

அத்துடன் பிரணாப் முகர்ஜியை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். 

இந்திய - சிறிலங்கா உறவுகளை ஊக்குவிப்பதில் பிரணாப் முகர்ஜி முக்கிய பங்களித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார். 

மேலும் பிரணாப் முகர்ஜி நாளை இந்தியக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதும் முறைப்படியான வாழ்த்து சிறிலங்கா அதிபரிடம் இருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளது. 
பிரணாப் முகர்ஜிக்கு வெளிநாட்டில் இருந்து கிடைத்த முதலாவது வாழ்த்து சிறிலங்கா அதிபருடையது என்பது குறிப்பிடத்தக்கது. 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் காலகட்டத்தில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக பிரணாப் முகர்ஜி பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire