vendredi 6 juillet 2012

கிழக்கு மாகாண ஈ. பி. ஆர். எல். எப். புளொட் உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு


கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஈ. பி. ஆர். எல். எப். மற்றும் புளொட் உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று விசேட ஊடக மாநாடொன்றை நடத்திய இவர்கள் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கப் போவதாகவும் உறுதியளித்தனர்.
நேற்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடக மாநாட்டின் போதே புளொட் மற்றும் ஈ. பி. ஆர். எல். எப். உறுப்பினர்கள் இத்தகைய உறுதி மொழியை வழங்கினர். முப்பது வருட யுத்தத்துக்குப் பின் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வரும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும் மக்கள் மேம்பாட்டுக்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் பூரண ஒத்துழைப்பை வழங்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தேசிய ஒற்றுமைக்கான கிழக்கு மக்கள் இயக்கம் நேற்றுக் காலை கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியது.
இம் மாநாட்டில் கிழக்கு மாகாணத்தின் பல பிரதேச சபைகளிலும் மாநகர சபையிலும் தற்போது உறுப்பினர்களாகப் பதவி வகிக்கும் பதினைந்துக்கும் மேற்பட்ட ஈ. பி. ஆர். எல். எப். மற்றும் புளொட் உறுப்பினர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
ஈ. பி. ஆர். எல். எப். கட்சியைச் சேர்ந்த கந்தையா பத்மநாதன், தம்பிஐயா கிருபைராஜா, சோமதிலக்க சிறில், முருகேசு சிவஞானம், என். பாலச்சந்திரன், செல்வம் விக்னேஷ்வரன், புளொட் அமைப்பைச் சேர்ந்த நாகமணி சிவராஜா, கந்தசாமி மகேந்திரன், சுப்ரமணியம் உதயசூரியன், சுப்ரமணியம் சிவலிங்கம், செல்லதுரை தங்கராஜா ஆகியோரே இம்மாநாட்டில் கலந்துகொண்டு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினர்.
இவர்கள் மேலும் தெரிவிக்கையில் :
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இதனை நாம் வரவேற்கிறோம். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இத்தகைய செயற்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் சுயநலத்துடன் செயற்பட்டு வருகின்றது.
மக்களுக்காக எதனையும் செய்யாத அக்கட்சியினர் தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களை மீண்டும் துயரத்தில் மூழ்கடிக்கவே முயற்சி செய்து வருகின்றனர். முப்பது வருடகால யுத்தத்தினால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு ள்ளனர். சில அரசியல்வாதிகள் தமது சுயநல அரசியலுக்காக மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க முயற்சிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது தொழில் வாய்ப்புகள், போஷாக்கின்மை, விதவைகளுக்கான வாழ்வாதாரம், அபிவிருத்தி என பல தேவைகள் நிலவுகின்றன.
எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு வெறுமனே பேசிக் கொண்டிருப்பதால் மட்டுமே மக்கள் எதிர்பார்ப்பை நிறை வேற்ற முடியாது. அதனால்தான் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு மக்களுக்குச் சேவை செய்ய நாம் அனைவரும் தீர்மானித்துள்ளோம். எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire