jeudi 2 juillet 2015

புலிகள் தளபதிகளில் ஒருவர் பேட்டி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியதன் பின்னணி குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வொஷிங்டன் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் கசிந்து உள்ள தகவல்கள் பேரதிர்ச்சி தருபவையாக உள்ளன. புலிகள் இயக்கத்தில் முன்னிலைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய குமணன் என்பவர் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கி இருக்கக் கூடிய பேட்டி ஒன்றின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் ஆச்சரியத்தைக் கொடுக்கின்ற போதிலும் நம்பிக்கைக்கு உகந்தனவாக உள்ளன என்று இந்த ஆவணத்தில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

இரா. சம்பந்தன் முதலான அரசியல்வாதிகள் மீது புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒருபோதும் சிறிய நம்பிக்கைதானும் வைத்திருக்கவில்லை என்றும் குழப்பவாதிகளும், சுய நலவாதிகளுமான இவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற நோக்கத்திலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆரம்பித்தார் என்றும் முன்னாள் போராளி குமணன் தெரிவித்தார் என்று இதில் உள்ளது.

தமிழ் அரசியல்வாதிகளில் பலர் திருத்த முடியாத ஜென்மங்கள் என்று கண்டு கொண்ட தலைவர்கள் இவர்களுக்கான தண்டனையாகவே எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் போய் தமிழ் தேசியம் பேசித் திரியுங்கள் என்று உத்தரவிட்டார், ஆனால் இந்த அரசியல்வாதிகள் புலிகளின் புலனாய்வுத் துறையால் மிக நெருக்கமாக எப்போதும் கண்காணிக்கப்பட்டு வந்திருக்கின்றமையுடன் புலிகளின் பிஸ்டல் குழுவால் எந்நேரமும் மரண தண்டனை பெறக் கூடியவர்கள் பட்டியலில் முன்னிலை வகித்தும் காணப்பட்டனர், இது இந்த அரசியல்வாதிகளுக்கும் மிக நன்றாகவே தெரிந்து இருந்தது, ஆனால் இவர்கள் தமிழ் தேசியம் பேசுகின்றமை மூலம் புலிகளின் மரண தண்டனையில் இருந்து பாவ விமோசனம் கிடைக்கும் என்று விசுவாசித்தார்கள் என்றும் குமணனை மேற்கோள் காட்டி இதில் உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய புலிகளின் தலைவரே இதன் பதவி நிலை முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் ஆகியோரை பெயரிட்டு நியமித்து வந்திருக்கின்றார், இவர்கள் அடிக்கடி வன்னிக்கு வரவழைக்கப்பட்டு புலிகளின் தலைவரால் அறிவுறுத்தப்பட்டனர், அப்போதெல்லாம் இவர்கள் கை கொட்டி, வாய் பொத்தி தலைவரின் அறிவுறுத்தல்கள், உத்தரவுகள் போன்றவற்றை செவிமடுப்பார்கள் என்றும் குமணனால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களின் நடத்தை குறித்து தலைவருக்கு புலனாய்வுத் துறை அறிவித்துக் கொண்டே இருக்கும், இதற்கமைய இவர்கள் புலித் தலைமையால் தண்டிக்கப்பட்டும், கண்டிக்கப்பட்டும், எச்சரிக்கப்பட்டும் வந்திருக்கின்றனர், ஆனால் மாவை சேனாதிராசா விடயத்தில் மாத்திரம் விட்டுக் கொடுப்போடு பல சந்தர்ப்பங்களில் தலைமை நடந்து கொண்டது, ஏனென்றால் இவரை வைத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வண்டவாளங்களை அறிந்து வந்திருக்கின்றார்கள், இவரும் மிகுந்த உற்சாகத்துடன் போட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டு வந்திருக்கின்றார் என்றும் குமணன் கூறி இருக்கின்றார்.
இக்காரணங்களால் புலிகளின் அழிவுக்காக இவர்கள் காத்திருந்தனர், புலிகள் இயக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடக்கப்பட்டபோது உள்ளூர மகிழ்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் என்று தெரிவித்து உள்ள குமணன் புலிகள் இயக்க தலைமையை அழிவில் இருந்து காப்பாற்ற கிடைத்த சந்தர்ப்பங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டும் என்றே தவற விட்டது என்று கோடி காட்டு உள்ளார்.

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதை வரவேற்று, பாராட்டி சம்பந்தன் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார், புலிகள்அழிக்கப்பட்ட பிற்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கில் வெளிப்படையான மாற்றம் ஏற்பட்டது, புலிகளால் விரோதிகளாக, துரோகிகளாக, வேண்டத் தகாதவர்களாக, தீண்டத் தகாதவர்களாக பார்க்கப்பட்ட தென்னிலங்கை பிரமுகர்களோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறவு கொண்டாடி வருகின்றது, ஸ்ரீலங்காவின் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டது, சலுகைகளுக்காக ஸ்ரீலங்கா அமைச்சர்களின் வீடுகளில் கால் கடுக்க நிற்கின்றது என்று சொல்லி குமணன் பொருமி இருக்கின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு வந்தால் தமிழினம் இன்னும் பேரவலங்களை சந்திக்க நேரும் என்றும் குமணன் தெரிவித்து இருக்கின்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire