vendredi 5 octobre 2012

13 ஆம் திருத்தம் என்பது இதுவே; அமைச்சர் கெஹலிய புதிய விளக்கம்



news
 முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் வலது கையால் கொடுத்து விட்டு இடது கையால் தட்டிப்பறிப்பது தான். இதனால் யாருக்கு என்ன பயன்?இப்படித் தெரிவித்தார் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல.
 
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அமைச்சரவைப் பேச்சாளர் என்ற வகையில் கெஹலிய ரம்புக்வெல ஊடகவியலாளர்களுக்கு அறிவித்தார். 
 
இவ்வேளையில் வடமாகாண சபை மற்றும் "திவிநெகும" சட்டவரைவு தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அரசியலமைப்பின் 13 ஆவது அரசியல் திருத்தத்தின்படி மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை இல்லாதொழிப்பதே "திவிநெகும" சட்டவரைவு. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றி அமைச்சர் என்ற வகையில் உங்களுடைய கருத்து என்ன? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்குப் பதில் அளித்த அமைச்சர், அரசு ஒரு போதும் அரசமைப்புக்கு மாறான எந்த ஒரு விடயத்தையும் செயற்படுத்தாது. நாம் நீதிமன்றத்தை மதிக்கின்றோம். அதேவேளை,  ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் வலது கையால் கொடுத்துவிட்டு இடது கையால் தட்டிப் பறிப்பதே. இதனால் யாருக்கு என்ன பயன் என்றார்  அமைச்சர்.
 
இப்போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை வடக்கில் இல்லை. மக்கள்  பிரதிநிதிகளும் இல்லை. ஆளுநர் ஜனாதிபதியின் அரச பிரதிநிதி. இந்த வகையில், மக்கள் சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உதாசீனப்படுத்திவிட்டு வடக்கு அரச பிரதிநிதியான ஆளுநரின் ஒப்புதலுடன் "திவிநெகும" சட்ட வரைவை 
நடைமுறைப்படுத்த முடியுமா? என அடுத்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அமைச்சர் நாம் அரசமைப்பை மீறும் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டோம். அதேவேளை இப்படியான ஒரு இக்கட்டான நிலைமை ஏற்படும் போது அதற்கு என்ன மாற்றுவழி என்றும் அரசமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அல்லவா? அதன்படி செயற்படுவோம்  என்றார்.
 
உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தின் பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியும். ஆனால் இப்பொழுது வடமாகாண சபையில் அங்கீகாரம் இல்லை. அப்படியானால் எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறீர்கள்? என எழுப்பப்பட்ட கேள்விக்கு,எட்டு மாகாண சபைகள் அங்கீகரித்து விட்டன. ஒரேயொரு மாகாண சபையின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் முழு நாட்டையும் இருட்டில் போட முடியாது. அபிவிருத்தித் திட்டங்களையும் முடக்கி வைக்க முடியாது. ஏதோ ஒரு வழியில் தீர்வு காணப்படும் என்று பதில் அளித்தார் கெஹலிய ரம்புக்வெல. 

Aucun commentaire:

Enregistrer un commentaire