vendredi 5 octobre 2012

இலங்கைக்கு கூடாங்குளம் அணு உலையால் பாதிப்பா? விஷேட குழு இந்தியா பயணம்!!


கூடங்குளம் அணு உலையினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அணு சக்தி அதிகார சபை அதிகாரிகளுக்கிடையில் நடைபெறும் முதலாவது கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி இந்தியாவில் நடைபெற உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இலங்கையில் இருந்து அறுவரடங்கிய குழுவொன்று அங்கு செல்ல உள்ளதோடு, கூடங்குளம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது குறித்தும் இங்கு ஆராயப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூடங்குளம் அணு உலை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர்; கூடங்குளம் அணு உலையினால் இலங்கைக்கு ஏதும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். சுற்றியுள்ள நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அணு உலையினூடாக அணுக்கசிவு ஏற்பட்டால், அதனால் மன்னார், யாழ் குடா ஆகிய பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே, சர்வதேச அணு சக்தி உடன்பாட்டின் பிரகாரம் இந்தியா செயற்பட வேண்டும். இது தொடர்பில் இந்த சந்திப்பில் ஆராயப்படும். அணுக்கசிவு நிகழும் பட்சத்தில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இடர் முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அணுசக்தி அதிகார சபைத் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன, அணு சக்தி அதிகார சபை சிரேஷ்ட பிரதிப்பணிப்பாளர், அமைச்சு உயரதிகாரிகள் இருவர் மற்றும் வெளிவிவகார உயரதிகாரிகள் இருவர் ஆகியோரும் நானும் இந்த சந்திப்பில் பங்கேற்கின்றோம்.

இந்தியா தரப்பில் அந்நாட்டு அணு சக்தி அதிகார சபை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சர்வதேச அணு சக்தி அதிகார சபை உடன்பாட்டின் பிரகாரம் இந்தியா, இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க வேணடும். இது தொடர்பில் நாம் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை தயாரித்துள்ளோம். இது இந்திய அணுசக்தி அதிகார சபைக்கு வழங்கப் பட்டுள்ளது என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire