dimanche 26 août 2012

வெனிசுலாவில் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து : 39 பேர் சாவு

கராகஸ், ஆக 26- தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணை வளம் மிகுந்த நாடு. அமெரிக்காவுக்கு தேவையான பெருமளவு எண்ணை இங்கிருந்துதான் ஏற்றுமதி ஆகிறது. 

இந்த நிலையில் அங்குள்ள பால்கான் மாகாணத்தில் அமுய் என்ற இடத்தில் உள்ள மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு சுத்திகரிப்புக்காக வைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணை கொளுந்து விட்டு எரிந்தது. எனவே, அங்கிருந்து கரும்புகை வெளியேறியது. மேலும் அங்கிருந்த எண்ணை பாரல்கள் வெடித்து சிதறின. 

இந்த தீ விபத்தில் 39 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் . அவர்களில் 18 பேர் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேசிய படையை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர மற்ற 15 பேர் பொதுமக்கள் மேலும் 6 பேர் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்த விபத்து வெனிசுலாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள கியாஸ் கசிவே விபத்துக்கு காரணம் என பெட்ரோலிய மந்திரி ரபேல் ரமியர்ஷ் தெரிவித்துள்ளார். 

விபத்தில் பலியானவர்களுக்கு அதிபர் ஹுகோ சாவேஷ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் இந்த விபத்து தனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. மேலும் இது வெனிசுலாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளார். 

தீ விபத்தில்உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெனிசுலாவில் 3 நாள் அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படஉள்ளது. இந்த விபத்து குறித்து தீவிர விசாரணைக்கு அதிபர் சாவேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire