mardi 7 août 2012

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு பிரபாகரன் மட்டும் காரணமல்லர் - ஹரிகரன்



 

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காரணமல்லர் என இலங்கையில் இந்தியப்படைகள் கடமையில் ஈடுபட்டிருந்த போது அதில் பணியாற்றிய கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய உடன்படிக்கையின் வெற்றிக்கு புலிகள் மிகப் பெரிய தடையாக இருந்திருப்பார்கள் என்பதை எவரும் நியாயப்படுத்த முடியாது. இந்திய அரசு, புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் தமிழீழத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஆயுதக்குழுவை வழிநடத்திய பிரபாகரனின் ஒற்றை மனப்போக்கை புரிந்து கொள்ளத் தவறிய இராணுவத்தினர் போன்ற பலரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு காரணமாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனா ஆகியோருக்கு இடையே 1987 ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கேணல் ஹரிகரன் நடத்திய மதிப்பீட்டு அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினை தொடர்பில் நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதில் இலங்கை இந்திய உடன்பாடு தவறியுள்ளதாயினும், இலங்கை அரசமைப்பில் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது, வடக்குக் கிழக்கு மாகாணம் உருவாவதற்கான வழியை இந்த உடன்பாடு வகுத்துள்ளது.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றுசேர்த்து வடகிழக்கு மாகாணத்தை உருவாக்குவதற்கு கருத்து வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் தெளிவின்மை காணப்படுகின்றது.

தமிழ் சிறுபான்மை மக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஆனால் தமிழ் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் இந்த உடன்பாட்டில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களின் உரிமை இதில் தட்டிக்கழிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஆயுதக் குழுக்களும், தமிழ் அரசியற் கட்சிகளும் தமது போராட்டத்தை நடத்திச் செல்வதற்கு இந்தியாவின் நல்லெண்ணத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்நிலையில் இத்தமிழ் பிரதிநிதிகள் தமது சொந்தக் கருத்துக்களுக்க அப்பால், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆனால், இந்த உடன்பாட்டை பிரபாகரன் ஏற்றுக் கொள்வதற்கான நிர்ப்பந்தத்தை வழங்க வேண்டியிருந்தது. அவர் இந்தியாவின் நோக்கம் தொடர்பில் சந்தேகம் கொண்டிருந்தார். ஏனையவர்களுடன் பிரபாகரனை இணைப்பதற்கு, பிரபாகரனுடனான எம்.ஜி.ஆரின் செல்வாக்கை இந்தியா பயன்படுத்திக் கொண்டது.

இந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதில் இலங்கையும் தவறிழைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், இரு நாட்டுத் தலைவர்களும் இந்த உடன்படிக்கையின் பொதுநோக்கத்தை நிறைவுபடுத்துவதற்குப் பதிலாக தமது சொந்த நோக்கை அடைந்தகொள்வதற்காகவே இதனைப் பயன்படுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire