jeudi 9 août 2012

தமிழீழம் என்கின்ற இலக்கை அடைந்து கொள்வதற்கான தனது முயற்சியில் புலிகளின் தலைவர் நீண்ட தூரம் சென்றிருந்ததாக டேவிட் ஐயா சுட்டிக்காட்டு


இவர் 1983ல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்திற்கான சாட்சியமாக உள்ளார். இக்கலவரத்தில் ஆயுத அமைப்பைச் சேர்ந்த குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகியோர் உள்ளடங்கலாக 53 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

சென்னையை தளமாகக்கொண்ட The Hindu ஆங்கில ஊடகத்தில் B. KOLAPPAN எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
நீண்ட தாடியுடன், வயது முதிர்ந்த நிலையில் காணப்படும் திரு.டேவிட், சிறிலங்காவில் இடம்பெற்ற இனக்கலவரம் காரணமாக 1984ல் சென்னையை வந்தடைந்திருந்தார். சிறிலங்காத் தமிழரான டேவிட் ஐயாவின் தற்போதைய வயது 88 ஆகும்.

கட்டிடக் கலைஞரான சொலமன் அருளானந்தம் டேவிட் என்னும் முழுப்பெயரைக் கொண்ட இவர் ஐக்கிய இராச்சியத்தின் Liverpool எனும் இடத்தில் நகரத் திட்டமிடலாளராக பணியாற்றி, பின்னர் கென்யாவின் மொம்பாசா நகரின் திட்டமிடலாளராகவும், பிரதான கட்டட வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்தார்.

தனது தாய்நாடு தொடர்பாக மிகவும் கசப்பான சில நினைவுகளை மட்டுமே இவர் கொண்டுள்ள போதிலும், அமைதி மற்றும் ஜனநாயக வழிமுறையின் ஊடாக தனது மக்கள் அவர்களது அரசியல் இலக்குகளை என்றாவது ஒருநாள் அடைந்து கொள்வார்கள் என்பதில் டேவிட் ஐயா அசையாத நம்பிக்கை கொண்டுள்ளார்.

சிறிலங்காவின் மலைநாட்டுப் பகுதியில் இடம்பெற்ற கலவரம் காரணமாக பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களான மலையக தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வை வழங்குவதை நோக்காகக் கொண்டு டேவிட் ஐயா 'காந்தியம்' என்கின்ற நிறுவனம் ஒன்றை நிறுவியிருந்தார்.

இவர் 1983ல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்திற்கான சாட்சியமாக உள்ளார். இக்கலவரத்தில் ஆயுத அமைப்பைச் சேர்ந்த குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகியோர் உள்ளடங்கலாக 53 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். டேவிட் ஐயாவின் நண்பரும், 'காந்தியம்' அமைப்பின் இணை நிறுவுனருமான கலாநிதி ராஜசுந்தரமும் இக்கலவரத்தின் போது கொல்லப்பட்டார்.

"காந்தியம் அமைப்பானது ஆயுதக்குழுவினருக்கு பயிற்சிகளை வழங்குவதாக முடிவெடுத்த சிறிலங்கா அரசாங்கம் 1983ல் என்னையும் ராஜசுந்தரத்தையும் கைதுசெய்தது. வன்முறைச் சம்பவம் நடந்தேறிய பின்னர், கொல்லப்பட்ட மற்றும் அரை உயிரில் தவித்துக் கொண்டிருந்த மனித உடலங்களை நான் பார்த்தேன்" என டேவிட் ஐயா நினைவுகூருகின்றார்.

இதன் பின்னர் வெலிக்கடைச் சிறையிலிருந்த இவர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இடம்மாற்றப்பட்டர். ஆனால் டேவிட் ஐயாவும் இவருடன் சிறைச்சாலையிலிருந்த 42 பேரும் சிறையை உடைத்து தப்பிச் சென்றனர். இவ்வாறு தப்பிச் சென்ற இவர்கள் 27 நாட்கள் வரை வன்னிக் காடுகளில் மறைந்திருந்து விட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்றனர்.

"நாங்கள் மேலும் மூன்று ஆண்டுகள் எமது காந்தியம் அமைப்பை தொடர்ந்தும் சிறிலங்காவில் நடாத்தியிருந்தால், காந்தியின் கனவான ‘Ram Rajya’ என்பதை நிறுவியிருப்போம். சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் சிங்கள பேரினவாதிகள், தமிழ் மக்களை அழிப்பதை நோக்காகக் கொண்டிருந்தனர். இதன் விளைவாக காந்தியம் அழிக்கப்பட்டது" என டேவிட் ஐயா கூறுகிறார்.

கென்யாவின் மொம்பாசாவில் பணிபுரிந்த போது, மகாத்மா காந்தி தொடர்பாக டேவிட் ஐயா அறிந்தார். "இந்தியா தொடர்பாக இந்திய சட்டவாளர் ஒருவரின் எழுதுவினைஞர் 9000 புத்தகங்களை சேகரித்து அவற்றை மொம்பாசா நூல்நிலையத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். நான் கென்யாவில் வாழ்ந்த ஒவ்வொரு நாள் பின்னேரங்களிலும் பி.ப 4 தொடக்கம் 8 மணி வரை இந்நூலகத்தில் பொழுதைக் கழிப்பேன். அச்சந்தர்ப்பத்திலேயே நான் இந்தியா தொடர்பாகவும், எனது வாழ்வில் முன்னணி பங்கு வகிக்கக் காரணமான மகாத்மா காந்தி தொடர்பாகவும் வாசித்தறிந்து கொண்டேன்" என புலமைப்பரிசிலை வென்று பின்னர் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் கட்டட வடிவமைப்பிற்கான இளமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட டேவிட் ஐயா குறிப்பிடுகிறார்.

நகரத் திட்டமிடல் தொடர்பாக கற்பதற்காக பிரித்தானியாவிற்கு செல்வதற்கு முன்னர், டேவிட் ஐயா சிறிலங்காவின் பொது நிர்வாகத் திணைக்களம் ஒன்றில் பணிபுரிந்தார். பாதிக்கப்பட்ட மக்களிற்கு சேவையாற்றுவதை இவர் தனது நோக்காக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்திற்கு அனைத்துலக நாடுகளும் தமது ஆதரவுகளை ஒருசேர வழங்கிவருவதை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உணரத் தொடங்கிய போதே தனது போராட்டத்தை கைவிட்டிருந்தால், பெருமளவான மனித உயிரிழப்புக்களை தடுத்திருக்க முடியும் என்பது டேவிட் ஐயாவின் கருத்தாகும்.

பூகோள-அரசியல் மாற்றத்தை கருத்திலெடுத்து செயற்படுவதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தவறிவிட்டதாகவும், தமிழீழம் என்கின்ற இலக்கை அடைந்து கொள்வதற்கான தனது முயற்சியில் புலிகளின் தலைவர் நீண்ட தூரம் சென்றிருந்ததாகவும் டேவிட் ஐயா சுட்டிக்காட்டுகிறார்.

"தமிழ் மக்களை பிரபாகரன் பாதுகாப்பதற்காக செயற்பட்டவர் என்பதில் நான் எவ்வித சந்தேகமும் கொண்டிருக்கவில்லை. ஆனால் பிரபாகரனை தமிழர்களின் தலைவராக ஏற்றுக் கொள்வதில் நான் உடன்பாடு கொள்ளவில்லை. அவரது ஆளுமையில் தவறு காணப்பட்டது" என டேவிட் ஐயா வாதாடுகிறார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் எட்டப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள நிலையிலும் இது தொடர்பில் கசப்பான உணர்வுகளைக் கொண்டுள்ள டேவிட் ஐயா, காந்தியத்தை பின்பற்றி ஜனநாயக நீரோட்டத்துடன் கலந்து, உலகெங்கும் பரந்துள்ள Aga Khan சமூகத்தவர்களைப் போன்று மக்களின் ஒருசாரார் மறுசாராருக்கு உதவி செய்யும் போதே தமிழ் மக்கள் தமக்கான அரசியல் இலக்கை அடைந்து கொள்ள முடியும் என்கிறார்.

''Aga Khan சமூகத்து மக்கள் வாரத்தில் ஒரு தடவை ஒன்றுகூடி தமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கின்றனர். அத்துடன் சிறார்களின் கல்விக்கான உதவியையும் வழங்குகின்றனர். இச்சமூகத்தவர்களை சிறிலங்காத் தமிழர்களும் பின்பற்ற முடியும். கெட்டவாய்ப்பாக, எமது மக்கள் சுயநலவாதிகளாக, உலோபிகளாக வாழ்கின்றனர். தமிழ் மக்களின் ஒரு தொகுதியினரால் நிறுவப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழ் சமூகத்தின் நலனைக் கருத்திற் கொண்டு வினைத்திறனாக செயற்பட முடியும்" என டேவிட் ஐயா கூறுகிறார்.

"அதேநேரத்தில், யுத்தக் குற்றங்கள் மற்றும் அனைத்துலக சட்டம் தொடர்பான அமெரிக்க வல்லுனரான பேராசிரியர் பிரான்சிஸ் ஏ.பொய்லேயின் ஆவணங்கள் தொடர்பாகவும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொறுப்புக் கூறும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் சபை மீது அழுத்தம் கொடுக்க முடியும்" எனவும் டேவிட் ஐயா தெரிவித்துள்ளார்.

"பொஸ்னியா விவகாரத்தில் பொய்லேயின் முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன. இதேபோன்று சிறிலங்கா விடயத்திலும் நாம் இதனைப் பின்பற்ற முடியும்" என டேவிட் ஐயா குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire