mercredi 15 août 2012

இரத்தம் சிந்திப் பெற்ற வெற்றியைப் பாதுகாப்பதற்கு கிழக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்!


- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
east election1நாட்டின் மூன்று மாகாணசபைகளுக்கு – கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ – இவ்வாண்டு செப்ரெம்பர் 08ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழ் - முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரையில், கிழக்கு மாகாணசபைத் தேர்தலே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்குப் பல காரணங்கள் உண்டு.
முதலாவதாக, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கென 1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கையின்படி அமைக்கப்பட்ட மாகாணசபைகளில் வட கிழக்கு இணைந்த மாகாணசபையே பிரதான நிர்வாக அலகாக இருந்தது. அது அமைக்கப்பட்ட நேரத்தில் புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அதை எதிர்த்து நிராகரித்தாலும், இன்று அந்த மாகாணசபை வடக்கும் கிழக்குமாகப் பிரிக்கட்ட நிலையிலும்கூட அதன் அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆலாய்ப்பறப்பதில் இருந்தே அதைப் புரிந்துகொள்ள முடியும்.
இரண்டாவது, 2008இல் புலிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்தலில், அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்று சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரை முதலமைச்சராகக்கொண்டு கடந்த 4 ஆண்டுகளாக ஓரளவு சிறப்பாக நடைபெற்று வந்துள்ளதால், மாகாணசபை முறைமை என்பது தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாக மாறிவிட்டிருப்பதாகும்.
மூன்றாவது, 2008 தேர்தலில் போட்டியிடாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, 2009 இல் புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பின்னர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றது. “சீஸ.சீஸஇந்தப்பழம் புளிக்கும்” என மாகாணசபையை முன்னர் நிராகரித்தவர்கள், இப்பொழுது ‘புளித்த பழம் மட்டுமல்ல, அழுகிய பழம் என்றாலும் சாப்பிடுவோம’; எனத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர்.
நான்காவது, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒரு முக்கியமான பங்காளிக்கட்சியாக இருந்துகொண்டே, இத்தேர்தலில் அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிடுவதால், அதன் பலத்தை பரீட்சிக்கும் ஒன்றாக இத்தேர்தல் இருப்பதுடன், அரசாங்கத்துக்கும் முஸ்லீம் காங்கிரசுக்குமான எதிர்கால உறவையும் இந்தத்தேர்தல் முடிவு வெளிப்படுத்தக்கூடும்.
ஐந்தாவது, கிழக்கு மாகாணம் பாரம்பரியமாக தமிழ் - முஸ்லீம் மக்களின் வாழ்விடப் பிரதேசமாக இருந்து வந்த போதிலும், சுதந்திரத்துக்குப் பின்னர் ஏற்பட்ட பல்வேறு சிங்களக் குடியேற்றங்களால், தமிழ் - முஸ்லீம் - சிங்கள என மூவின மக்களையும் கொண்ட ஒரு பிரதேசமாக இன்று மாற்றமடைந்துள்ளது. எனவே மக்கள் இத்தேர்தலில் இன அடையாளத்தையா அல்லது அரசியல் நிலைப்பாட்டையா கூடுதலாக வெளிப்படுத்துவார்கள் என்பதையும் இத்தேர்தல் எடுத்துக்காட்டக்கூடும்.
கடந்த காலங்களில் கிழக்கில் நடைபெற்ற பாராளுமன்ற, ஜனாதிபதி, மாகாணசபைத் தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றுவந்த இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, அதன் தவறான தலைமைத்துவத்தாலும், உள் பிளவுகளாலும் இத்தேர்தலில் ஒரு பிரதான சக்தியாக இல்லாமல் போய்விட்டது. எனவே அதனை இங்கு பெரிதாக கவனத்துக்கு எடுக்கவேண்டிய அவசியமில்லை.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான அரசியல் அணிகளினதும் பின்னணி கவனத்துக்குரிய ஒன்றாகும்.
அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அதில் பல்வேறு விதமான அரசியல் சக்திகள் இருக்கிறார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள், சிங்கள – தமிழ் தேசியவாதிகள், இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள், சிங்களப் பேரினவாதிகள் எனப் பலரும் இருக்கின்றனர். இருந்தபோதும் சிங்களப் பேரினவாதிகளைவிட ஏனையவர்களின் பலமே அதிகமாelection eastனதாகும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அதில் பல கட்சிகள் அங்கம் வகித்தாலும், அவை எல்லாமே சாராம்சத்தில் பிற்போக்கு தமிழ் தேசியவாத சக்திகளாகும். தமிழ் கூட்டமைப்பு என்பது, கடந்தகால பிற்போக்கு தமிழ் இனவாதக் கட்சிகளான தமிழ் காங்கிரஸ், தமிழரசு, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவற்றின் தொடர்ச்சியாக இருப்பதுடன், அது பாசிச புலிகளால் அதன் தேவை கருதி உருவாக்கப்பட்ட ஒன்றுமாகும். எனவே புலிகள் அழியும் வரை தமிழ் கூட்டமைப்பு, புலிகளின் சகல மக்கள் விரோத, நாசகாரச் செயல்களுக்கும் உடந்தையாகவே இருந்து வந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையோ, முற்போக்கு சக்திகளையோ, குறைந்தபட்சம் ஜனநாயக சக்திகளையோ மருந்துக்கும் காண முடியாது.
முஸ்லீம் காங்கிரசைப் பொறுத்தவரை, அது காலம் சென்ற அஸ்ரப் அவர்களால் முஸ்லீம் மக்களின் தேசிய நலன்களை வென்றெடுப்பதற்காக  உருவாக்கப்பட்டிருந்தபோதிலும், இன்றைய தலைவர் ஹக்மீம் அவர்களினால் அது ஒரு சந்தர்ப்பவாதக் கட்சியாகச் சீரழிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி நிற்கிறது.
இந்த மூன்று அணிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொள்கை தெளிவானது. பல்வேறு குறைபாடுகள் இருந்த போதிலும், அது பாசிசவாதப் புலிகளை அழித்துப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது வரலாற்றில் எதிர்பார்க்காத ஒரு சாதனையாகும். போர் இல்லாமல் போனதால்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பலரும் இத்தேர்தலில் போட்டியிட முடிகிறது என்பதிலிருந்தே, அது நாட்டுக்கு செய்த அளப்பரிய சாதனை புரியும். மிகவும் பின்தங்கிய கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, மிகவும் அவசியமாகத் தேவைப்படும் அபிவிருத்தி முதல் இனப்பிரச்சினைத் தீர்வுவரை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பால் மட்டுமே எதையாவது சாதிக்க முடியும். கடந்தகாலச் செயற்பாடுகளிலிருந்து இதை மக்கள் நன்கறிவர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, இம்மாகாணத்தில் வாழுகின்ற முழுத் தமிழ் மக்களும் அதற்கு வாக்களித்தாலும்கூட, அதனால் மாகாணசபை நிர்வாகத்தைக் கைப்பற்ற முடியாது. ஏனெனில் கிழக்கு மாகாண இன விகிதாசாரத்தைப் பொறுத்தவரை தமிழர்கள் மூன்றிலொரு பங்கினர்கள் மட்டுமே. ஒரு கற்பனையாக கிழக்கு மாகாணசபையைத் தமிழ் கூட்டமைப்பு கைப்பற்றுகின்றது என வைத்துக்கொண்டாலும், இனப்பிரச்சினைக்கான தீர்வில் மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொள்ளாத அவர்களால் மாகாணசபையை முழு விசுவாசத்துடனும் திறமையுடனும் கொண்டு நடாத்த முடியாது.
அத்துடன், காலம்காலமாக சிங்கள விரோத, முஸ்லீம் விரோத அடிப்படையில் தமிழ் இனவாதப் பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் ஒரு தமிழ் தலைமையால், மூவின மக்கள் கலந்து வாழும் (அதிலும் மூன்றிலிரண்டு பங்கு ஏனைய இரு இனங்களும்) ஒரு மாகாணத்தை நிர்வகிப்பதை கற்பனை செய்து பார்க்கவே முடியாது. அதுவும் தீவிர அரச எதிர்ப்பையே தமது அடிப்படையாகக்கொண்டு செயற்பட்டு வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பால், அவசியம் தேவைப்படும் மத்திய அரசாங்கத்தின் உதவியின்றி மாகாண நிர்வாகத்தை நடாத்துவதென்பது நினைத்துக்கூட பார்க்க முடியாதது.
முஸ்லீம் காங்கிரசைப் பொறுத்தவரை, அது மாகாணசபைத் தேர்தலில் சில ஆசனங்களைப் பெறும் என்ற போதிலும், அதனால் எந்தக்காரணம் கொண்டு மாகாண நிர்வாகத்தைக் கைப்பற்ற முடியாது. அதிலும் அதன் தலைவர் ஹக்கீமின் கடந்தகால சந்தர்ப்பவாதப் போக்குடன், தற்பொழுது இனவாதப் போக்கும் சேர்ந்து கொண்டுள்ளதால், அவர்மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அவர் அமைச்சராக இருந்துகொண்டே அரசாங்கத்தின் கூட்டுப்பொறுப்பை மதிக்காது பேசி வரும் பேச்சுகளும், பௌத்த குருமார்களுக்கு எதிரான உரைகளும், பின்னர் அந்தர் பல்டி அடித்து மன்னிப்புக் கோரியமையும், அவர் மீது சிங்கள மக்களுக்கு மட்டுமின்றி, முஸ்லீம் மக்களுக்கும் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தோற்றுவித்துள்ளது.
இந்த நிலைமைகளை வைத்துப் பார்க்கும் போது, கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தெளிவானது. அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறுதிப்பெரும்பான்மை பெற்று அங்கு ஆட்சி அமைப்பது சந்தேகத்துக்கிடமற்றது. அவ்வாறு அமைவதுதான் கிழக்கு மாகாண மக்கள் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக இரத்தம் சிந்திப் பெற்ற வெற்றிகளைப் பாதுகாப்பதற்கும் அவசியமானது.
எனவே கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற தமிழ் - முஸ்லீம் மக்கள் புத்திசாதுரியத்துடனும், தீர்க்கதரிசனத்துடனும் நடந்து, பிற்போக்கு பிரிவினைவாத தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், சந்தர்ப்பவாத இனவாத முஸ்லீம் காங்கிரசையும் இத்தேர்தலில் நிராகரிக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சரியானதையே தேர்ந்தெடுக்கும் புத்திக் கூர்மையும், மதி நுட்பமும் வாய்ந்த கிழக்கு மக்கள் அவ்வாறுதான் செய்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மற்றும் வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபை தேர்தல்களைப் பொறுத்தவரை, தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட ஒன்றாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire