mercredi 22 août 2012

ஒரு நாளைக்கு 500 முதல் 1000ம் பேர்வரை கொல்லப்பட்டுக்கொண்டிருக்கையில், ஒருமாதம் கழித்துப் பார்க்கலாம் என்று சொல்லுபவர்கள், எங்கள் இனத்தின் தலைவர்களாக இருக்கத் தகுதியுடையவர்களா?தமிழினம் அழிக்கப்படுவதற்கு துணைபோன தமிழ் தேசிய கூட்டமைப்பு (ரி.என்.ஏ)

ஆப்ரில் 13,2010   அறிக்கை   தட்பொதும் பொருந்த கூடியதேஇலங்கையில் நடைபெற்ற தேர்தல் தமிழர்களுக்குக் கிடைத்துவிட்ட உரிமையாகப் பலரும் கருதுகின்றனர். இந்தத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானால், அவர்கள் தமிழினத்தின் தலைவர்களாகக் கருதப்படுவார்கள் என்பது தமிழ் இனத்தவரது தவறான, நீண்டகால, பழக்கப்பட்ட நடைமுறையாக ஏற்பட்டிருந்தது. ஈழத் தமிழர்களும் விழுந்து விழுந்து வாக்களித்து இந்த அறுபத்தி இரண்டு ஆண்டுகால வரலாற்றில் இழப்புக்களைத் தவிர வேறு எந்த உரிமைகளையும் பெற்றது கிடையாது!

   இந்தத் தேர்தல் வழிமுறை சிங்கள இனத்துக்கு உரிமைகள், அதிகாரங்கள், ஆதிக்கங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளது, தமிழ் இனம் அழிக்கப்பட பேருதவி புரிந்துள்ளது.

   ஓரளவுக்கேனும் பரந்த மனப்பான்மை கொண்ட அரசியல்வாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் இருந்திருந்தால் தமிழர்கள் இப்படியான ஓர் அவல அழிவு நிலையை அடைந்திருக்கமாட்டார்கள்! இதே போன்று பரந்த மனப்பான்மை உடையவர்களாக புலிகளின் தலைவர்கள் இருந்திருந்தாலும் இது போன்ற அழிவுகளைத் தமிழர்கள் சந்தித்திருக்கமாட்டார்கள்.

   நாடாளுமன்றத்துக்குச் சென்று உரிமைகளைப் பெற முடியாது என்று கண்டுதான் தனிநாடொன்றை உருவாக்கி நாம் சுதந்திரமாக வாழலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்படியான விடுதலைப் போராட்டத்தை அனைவரிடத்திலும் தட்டிப் பறித்துத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் புலிகள்!

   வடக்குக் கிழக்கு மக்களிடமிருந்த போராட்டம் கிளிநொச்சிக்கும் முல்லைத்தீவுக்கும் இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது இலங்கைப் படைகளால். விடுதலைக்காகப் போராடிய அத்தனை இயக்கங்களும் இந்த அழிப்பு நடவடிக்கையைப் பார்த்துக்கொண்டு கைகட்டி மௌனித்து நின்றன. இதற்குக் காரணம் யார்? நாங்கள்தான் என்று புலிகள் சொல்லமாட்டார்கள்! ஏனென்றால் இவர்கள்தான் ஏனைய இயக்கங்களை மௌனிக்கச் செய்தவர்கள். இறுதியில் இவர்களே, “மொனிக்கிறோம்” என்று அறிவித்து எதிரிக்கு வழிவிட்டுக்கொடுத்தனர்.

   புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று பிற இயக்கங்கள் நினைத்ததில் தவறு ஏதும் இருக்க வாய்ப்பில்லை! ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு (ரி.என்.ஏ)ம் நினைத்ததில்தான் ஆச்சரியமும், ரகசியச் சதியும் மேலோங்கி நிற்கிறது!

   ஏப்ரல் 13 2009 அன்று ஈ.என்.டி.எல்.எப். உயர்மட்டக்குழு இந்திய மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களைச் சந்தித்தது. அப்போது ஈழத் தமிழர்கள் வன்னியில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்த வெண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

   இந்தியா புலிகளுடன் பேசுவதற்கான நியாயம் எதுவும் அப்போதைய சூழலில் இல்லை! புலிகளும், புலிகளின் பிறநாட்டு ஆதரவாளர்களும், தமிழ் நாட்டின் புலி ஈர்ப்புச் சக்திகளும், இந்தியாவுக்கு எதிராகப் பிரசாரமும், போராட்டங்களும் நடத்திக் கொண்டிருந்தனர். எங்கள் மக்கள் பற்றிப் பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை! மக்கள் என்ற சொல்லுக்குப் பின்னால் புலி என்ற பயங்கரவாதம் காப்பாற்றப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நேரம் அது!

   இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் சந்திப்பில், ஈழத் தமிழ் கட்சிகள் ஒன்று கூடி ஓர் மாநாட்டை உடனடியாக நடத்துவதென்றும், அம்மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை இந்தியாவிடம் கையளிப்பது என்றும் எனவே அப்படியான மாநாடு ஒன்றுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. 

   இதனை ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு ஆலோசகர், இந்த மாநாட்டில் அனைத்துக் கட்சிகளும் குறிப்பாக ரி.என்.ஏ யும் கலந்து கொள்ளும் என்றால் மாநாட்டுக்கான அனுமதியினை வழங்குவதுடன் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார் ஆலோசகர். 

   ரி.என்.ஏ. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு. எனவே அவர்களும் கலந்து கொள்வதென்றால் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதாகக் கருதலாம். இருந்தபோதிலும் இந்தியா இதனைச் செய்யத் தயாராக இருந்தது.

   ஈ.என்.டி.எல்.எப். குழுவிடம் அவர் (பாதுகாப்பு ஆலோசகர்) கருத்துத் தெரிவிக்கையில், நாளைய மறுதினம் (16-04-2009) அவர்கள் (ரி.என்.ஏ) எங்களைப் பார்ப்பதற்காக டெல்கி வருகிறார்கள். நான் அவர்களிடத்துக் கேட்கிறேன். அவர்கள் அப்படி ஓர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று உறுதி கூறினால் சண்டை நிறுத்தம்பற்றி உடனேயே முடிவெடுக்கிறோம் என்று கூறினார்.

   மறுநாள் இரவு எட்டு மணியளவில் சென்னை திரும்பிய ஈ.என்.டி.எல்.எப். தலைவர் திரு. ஞா.ஞானசேகரன் அவர்கள் உடனடியாக ரி.என்.ஏ முக்கியஸ்தர் திரு. சேனாதிராஜா அவர்களைச் சந்தித்து, மாநாடு பற்றியும், யுத்தம் நிறுத்தம் பற்றியும் பேசினார். 

   14-04-2009 இரவு இச்சந்திப்பு நடந்தது. யுத்த நிறுத்தம் ஏற்படுமானால் நாங்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்கிறோம். நான் சம்பந்தருடன் கதைக்கிறேன். 16ம் திகதி நாங்கள் மத்திய அரசு அதிகாரிகளைச் சந்திக்கிறோம், நாளைக் காலை டெல்கி புறப்படுகிறோம் என்று கூறிய சேனாதிராஜா அவர்களிடம், இந்த மாநாடும் யுத்தநிறுத்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று திரு. ஞா.ஞானசேகரன் அவர்கள் கூறி சேனாதிராஜா அவர்களை தனது காரில் ஏற்றி திரு. சம்பந்தன் அவர்களின் இருப்பிட இல்லத்தில் இறக்கிவிட்டுச் சென்றார்.

   டெல்கி சென்ற ரி.என்.ஏ குழுவினர் 16ம் திகதி இந்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்துக் கதைத்தனர். இறுதியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இந்த மாநாடு பற்றிக் கேட்டார். இந்தக் கேள்விக்கு திரு. சம்பந்தன் அவர்கள் கீழ்கண்டவாறு பதிலளித்தார்:

   “இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இலலை. எதற்கும் அடுத்த மாதம் இந்தியத் தேர்தல் முடிந்ததும் கலந்து கொள்கிறோம்” என்று பதிலளித்தார். நல்லது. தேர்தல் முடிந்ததும் அதுபற்றிப் பேசலாம் என்று கூறி சந்திப்பை முடித்துக்கொண்டனர் அரசு அதிகாரிகள்.

   இவர்கள் (ரி.என்.ஏ) சந்தித்தது 16-04-2009 அன்று, இந்தியாவின் தேர்தல் அறிவிப்பு வெளிவருவது 16-05-2009 அன்று. இந்த ஒருமாத காலமும் முல்லைத்தீவில் எங்கள் மக்கள் கொல்லப்படட்டும் என்ற திட்டத்தில்தான் திரு. சம்பந்தன் அவர்கள் இந்தப் பதிலைச் சொல்லியுள்ளார். திரு. சம்பந்தன் அவர்களுக்கு எங்கள் மக்கள் கொல்லப்படுவது ஓர் பிரச்சினையாகவே தெரியவில்லை. இது சம்பந்தன் அவர்களின் பதில் அல்ல, ரி.என்.ஏ. யின் பதில். ஒரு நாளைக்கு 500 முதல் 1000ம் பேர்வரை கொல்லப்பட்டுக்கொண்டிருக்கையில், ஒருமாதம் கழித்துப் பார்க்கலாம் என்று சொல்லுபவர்கள், எங்கள் இனத்தின் தலைவர்களாக இருக்கத் தகுதியுடையவர்களா?

   இவர்களுக்கும் இந்தியத் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. சண்டையை நிறுத்தி எங்கள் மக்களைக் காப்பாற்ற நினைப்பார்களா, அல்லது தேர்தல் முடிய யோசிப்போம் என்று சொல்வார்களா? எங்கள் மக்கள் முடக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்த அந்த ஐந்து மாதங்களும் ரி.என்.ஏ எம்.பி.க்கள் சிங்கள அரசின் சம்பளத்தை ஒரு நாள் விடாமல் பெற்றுள்ளனர். ஒரு நபர்கூட தாமாக முன்வந்து தங்களது எம்.பி. பதவிகளை இராஜினாமாச் செய்யவில்லை. இந்த நபர்களை மீண்டும் எம்.பி.க்களாகத் தேர்வு செய்தது தமிழ் மக்களின் துர்ரதிஸ்டமே! ஏனெனில் இவர்கள் திரைமறைவில் என்ன செய்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தமிழ் மக்களுக்கும் வேறு வழி தெரியாமல் இவர்களுக்கு வாக்களித்துவிட்டனர்.

   சண்டை நிறுத்தம் ஒன்றினை ரி.என்.ஏ விரும்பவில்லை என்பது இச்சம்வத்தின் மூலம் தெளிவாகிறது. எப்படியும் புலிகள் அழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பது ரி.என்.ஏ சிந்தனையாக இருந்துள்ளது. சம்பந்தன் அவர்களும் பிரேமச்சந்திரன் அவர்களும் தமிழீழத்தை வற்புறுத்தியவர்கள் கிடையாது. இவர்கள் இருவரும்தான் ரி.என்.ஏ யின் திரைமறைவு சாணக்கியர்கள்.

   ரி.என்.ஏ. மூன்று தடவைகள் இந்திய அரசைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். எந்தவித பயனும் ஏற்படவில்லை. அப்படியாயின் எதற்காகச் சந்தித்தார்கள். தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக அல்லாமல் வேறில்லை. நாங்களும் பெருமுயற்சி செய்தோம் என்று பிறநாட்டுத் தமிழர்களுக்குக் காண்பிக்கத்தான் முயற்சிகள் செய்தனர். எந்தப் பிரச்சினைக்கும் முடிவு உண்டு, எங்கள் மக்களை அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கலாம். ரி.என்.ஏ. திட்டமிட்டே செயற்படாமல் அனைத்திலிருமிருந்து நழுவி தங்கள் பதவிகளைக் காப்பாற்றி உலகம் சுற்றிவந்தார்கள்.

   இந்த எம்.பி. பதவிகளால் எங்கள் உரிமைகளை மீட்டெடுக்க முடியுமா? இவர்கள் ஆக்கிரமிப்பை, அழிவை தடுத்து நிறுத்தினார்களா? எம்.பி. பதவிகளால் தமிழ் இனத்துக்கு எந்தவித நன்மையும் விளையப்போவதில்லை என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். இவர்களுக்குக் கிடைப்பது சம்பளம், ஊக்கத்தொகை, உதவித்தொகை, பென்சன், வாகனம், தடை இல்லா பாஸ்போர்ட், விசா இல்லா அல்லது சுலபமான விசா, கறீன்சனல் பயணம் இவைதான் இந்த நபர்களுக்குக் கிடைக்கும் லாபங்கள். தமிழ் மக்களுக்கு எதுவும் கிடையாது.

   தமிழ் மக்களது உரிமையுடன் இந்த லாபம் பெறும் நபர்கள், சம்பளம் பெறும் நபர்கள் விளையாடுகின்றனர் என்பதுதான் உண்மை! இவர்களால் நாடாளுமன்றத்துக்கு ஓர் தீர்மானத்தைக் கொண்டு சென்று நிறைவேற்ற முடியுமா? தமிழ் இனத்தினர் சார்பாக அவர்களுக்கு நன்மை விளைவிக்கும் தீர்மானம் எதனையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது. இதுதான் இந்த நாடாளுமன்றத்தின் வரலாறு. எனவே எங்களை எம்.பி.க்கள் ஆக்கிவிட்டனர், நாங்கள் உரிமை பெற்றுத் தரப்போகிறோம் என்று யாராவது சொன்னால் அது முழுப் பொய் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

   ஈ.என்.டி.எல்.எப். இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழர் தேசிய மாநாடு ஒன்றினை நடத்த பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொண்டது. பலதரப்பட்ட தடைகளின் முடிவில் யாழ்ப்பாணத்தில் அதை நடத்துவதென்று முடிவெடுத்திருந்தது. இதுபற்றி பிறநாடுகளில் இருப்பவர்களுடன் கலந்து கதைத்து வரும் போது ரி.என்.ஏ பிரேமச்சந்திரன் நாங்கள் தேசிய மாநாடு ஒன்றினை நடத்தப் போவதாக செய்தி வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளார். எங்கள் மக்களைக் காப்பாற்ற முன்வராதவர்கள் இப்போது மாநாடு நடத்தப் போகிறோம் என்று எங்கள் மக்களை சுலபமாக ஏமாற்ற முற்பட்டுள்ளார்.

   ரி.என்.ஏ. நபர்கள் எவரும் தங்களைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ள தகுதியுடைவர்கள் இல்லை! எங்கள் மக்கள் அழிக்கப்படும் போது இவர்கள் வகித்த பதவியை விட இப்போது அதிக பலம் வாய்ந்த பதவி எதுவும் கிடைத்துவிட வில்லை! அதே எம்.பி. பதவிதான், அதே சம்பளம்தான், அதே வசதிகள்தான், சில வேளை இவர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கலாம்.

   இவர்கள் செய்யும் பணி நாடாளுமன்றத்தில் பேசுவது, அதனால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை? திரு. சம்பந்தன் அவர்கள் தனக்கு வேண்டிய பிறநாட்டு நபர் ஒருவருடன் கதைக்கும் போது, நான் எப்படி எல்லாம் பேசினேன் என்று கன்சாட்டில் இருக்கிறது! எடுத்துப் பாருங்கோ, என்று பெருமையாகக் கூறினார் என்றார் அவர்.

   கன்சாட்டில் இருந்து என்ன பயன்? இதுதான் ரி.என்.ஏ தமிழர்களுக்கு செய்துவிட்ட கைமாறா? எங்கள் மக்களது சாவில் பணம் (சம்பளம்) பெற்றுக்கொண்ட புண்ணிவான்கள் எங்கள் மக்களுக்கு வழிகாட்டப் புறப்பட்டு மீண்டும் வந்துள்ளனர். இவர்கள் பற்றித் தீர்மானிக்க வேண்டியது ஈழத் தமிழர்கள்தான். குறிப்பாக வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்கள்!

   தேர்தலின் வேட்பாளர்கள் தேர்வின் போது புளொட், ரி.யு.எல்.எப், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியவற்றின் தலைவர்கள் சம்மந்தன் அவர்களைச் சந்தித்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில் போட்டியிடுவோம் என்று கோரிக்கை வைத்தார்கள். அனைத்தையும் நிராகரித்த சம்பந்தன் அவர்கள் சில தலைவர்களை நையாண்டி செய்தும் அனுப்பிவைத்தார்.

   இப்போது அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயற்பட அழைப்பு விடுத்துள்ளார் சம்பந்தன் அவர்கள். பிற்போக்குக் குணம் கொண்ட தலைவர்கள்தான் இது போன்று வெளிவேசம் போடுவார்கள். சம்பந்தன் அவர்களும் இதற்கு விதிவிலக்கானவரல்ல! 

   எனவே வரும் காலங்களில் இந்தச் சந்தர்ப்ப வாதிகளிடத்து தமிழ் மக்கள் விளிப்புடன் செயற்பட வேண்டுகிறோம். இவர்கள் சந்தற்பவாதத்தில் இல்லை என்றால் அதனை மறுக்கும் பட்சத்தில் ஆதாரங்களுடன் நாம் தெரிவுபடுத்தத் தயாராக உள்ளோம்.

   ஈ.என்.டி.எல்.எப்.

Aucun commentaire:

Enregistrer un commentaire