lundi 28 avril 2014

புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனை காரணமாக இலங்கையில் வருடாந்தம் 2,80,000 பேர் உயிரிழப்பு

புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனை காரணமாக இலங்கையில் வருடமொன்றுக்கு 02 இலட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதேநேரம், புகைப்பிடித்தலால் மாத்திரம் நாளொன்றுக்கு 65 பேர் உயிரிழப்பதாகவும், அது வருடமொன்றுக்கு 21 ஆயிரம் ஆக விளங்குவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தின் கிராமமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புகைப்பிடிப்பதற்காக வருடமொன்றுக்கு 136 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் தெரிய வந்திருக்கின்றது.இவ்வாறான நிலையில் போதையற்ற சமூகம் 2014 என்ற தேசிய வேலைத் திட்டத்தைச் சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இவ்வேலைத் திட்டத்தின் கீழ் புகைப்பிடித்தல் மற்றும் மதுபாவனை தொடர்பாக கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர்கள் அண்மையில் அறிவூட்டப்பட்டனர். பாடசாலைப் பிள்ளைகள் புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனை பழக்கங்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் வகையில் சுகாதார அமைச்சும். கல்வி அமைச்சும் இணைந்து இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுக்கின்றன.
இந்தவகையில் ரோயல் கல்லூரி மாணவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன. மதுப்பாவனை அற்ற சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான வருடமாக இவ்வருடம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எமது நாட்டைப் போன்று உலகின் பல நாடுகளும் முகம் கொடுக்கின்ற பிரதான பிரச்சினையாக இது விளங்குகின்றது.
எமது நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 1200 பேர் பிறக்கின்றார்கள். சுமார் 1000 பேர் உயிரிழக்கின்றார்கள். உயிரிழப்பவர்களில் 60 வீதமானோர் அல்லது சுமார் 600 பேர் தொற்றா நோய்களாலேயே உயிரிழக்கின்றனர். தொற்றா நோய்களால் உயிரிழப்பவர்களில் 70 வீதமானோரின் மரணத்திற்கு புகைப்பிடித்தலும், மதுப்பாவனையுமே காரணமாக அமைந்துள்ளது.
இன்று எமது நாட்டில் சாதாரண தடிமன், காய்ச்சல் போன்று புற்றுநோய் காணப்படுகின்றது.
அதற்குப் பிரதான காரணமாக புகைப்பிடித்தலும், மதுப்பாவனையுமே அமைந்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire