dimanche 27 avril 2014

போலியான அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அவுஸ்ரேலியா பேச்சு

அவுஸ்ரேலியாவில் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அங்குள்ள போலி அகதிகளை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவது குறித்து உயர்அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். 
அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், Operation Sovereign Borders என்ற பெயரில் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே, போலியான அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அவுஸ்ரேலியா பேச்சுக்களை நடத்தியுள்ளது. 
கடந்த செவ்வாய்க்கிழமை கன்பராவில் உள்ள ஹயாட் விடுதியில் நடந்த ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்கள் தொடர்பான அவுஸ்ரேலிய - சிறிலங்கா கூட்டுக்குழுவின் இரண்டாவது கூட்டத்தில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான குழு சிறிலங்கா தரப்பில் கலந்து கொண்டது. 

இந்தக் கூட்டத்தில் பேசிய, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், முன்னைய ஆட்சிக்காலத்தில் அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களையும் திருப்பி அனுப்புவதில் அவுஸ்ரேலியா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ஏனைய நாடுகள் வழியாக சட்டவரோதமாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்தவர்களை எந்தச் சூழ்நிலையிலுவும் அவுஸ்ரேலியா ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அவர்களைத் திருப்பி அனுப்புவதில் அவுஸ்ரேலியா உறுதியாக இருப்பதாகவும் மொறிசன் தெரிவித்துள்ளார். 

அவுஸ்ரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அவுஸ்ரேலியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக நடந்து கொண்டிருந்கும் இந்த நடவடிக்கையால், அவுஸ்ரேலியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

அவுஸ்ரேலியப் பயணத்தின் போது கோத்தாபய ராஜபக்ச, அந்த நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளார். 

அவுஸ்ரேலியாவுக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மேற்கொண்டு முதல் பயணம் இதுவாகும்.



Aucun commentaire:

Enregistrer un commentaire