dimanche 27 avril 2014

அரசுடன் ஒத்துழைக்க உறுதுணையாக இயங்க நாங்கள் பின் நிற்க மாட்டோம் உறுதிபடத் தெரிவிப்பு முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வடமாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தான் தயாராக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கத்துடன்  இயங்க நாங்கள் பின் நிற்கமாட்டோம். சகல விடயங்களிலும் எமது ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இடம்பெற்றபோது இணைத்தலைவராக பங்குகொண்டு தலைமையுரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கென சில விடயங்களும், மத்திய அரசாங்கத்திற்கென சில விடயங்களும், இரண்டிற்கும் பொதுவான சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் காரணத்தினால் தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கூட்டப் படுவதை நாங்கள் ஏற் றுக்கொள்ள வேண்டி யுள்ளது.
எமது மாகாண மக் கள் மற்றைய மாகாண மக்கள் போலல்ல. அவர்கள் போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டு வந்துள்ளார்கள். அவர்களின் பிரச்சினைகளும் தேவைகளும் விசேடமானதும் தனித்துவமானவையுமாகும். எல்லோருக்கும் ஒரே அளவுப் பாதணிகள் பொருந்தும் என்று நினைப்பது முறையாகாது என்பதை அன்று ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் காட்டினேன்.
வட கிழக்கு மக்களின் விடிவிற்காகத்தான் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட் டது. ஆனால் அதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப் போய் எமக்குத் தந்துதவப் போன சமச்சீர்மையற்ற அதிகாரப் பகிர்வானது கவனத்திற்கு எடுக்கப்படாமல் போயுள்ளது.
எமது முடிவை மாற்றி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கு பற்ற முன்வந்துள்ளோம். மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கம் நடந்து கொண்டால் அவற்றிற்கு உறுதுணையாக இயங்க நாங்கள் பின் நிற்க மாட்டோம். எமது மக்களின் விமோசனமே எமக்கு முக்கியம் என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire