vendredi 3 octobre 2014

தன்னை மதமற்றவர் என்று அறிவித்திட தனி மனிதனுக்கு உரிமை உண்டு; உயர் நீதிமன்றம் 23.9.2014 அன்று ஆணியடித்த தீர்ப்பு

மதமற்றவர் என்று அறிவித்துக்கொள்ளும் உரிமையை வழங்கியது உச்ச நீதிமன்றம் :

தன்னை மதமற்றவர் என்று அறிவித்திட தனி மனிதனுக்கு உரிமை உண்டு; அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது என்று மண்டையில் அடித்ததுபோல மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள எவரிடமும் அவர் தனது மதம்பற்றிக் குறிப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது என்ற திட்டவட்டமான தீர்ப்பு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றம் 23.9.2014 அன்று அளித்து வரலாறு படைத்துள்ளது!
கிறித்துவ மதப் பிரிவில் ஒன்றான Full Gospel Church of God என்ற அமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள், அவர்கள் ஏசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள்தான்; ஆனால், கிறித்துவ மதத்தை நம்பாதவர்கள் என்ற நிலைப்பாடு உடையவர்கள்!

அம்மூவர் (டாக்டர் ரஞ்சித் மொய்ட்டி, கிஷோர் நசாரே, சுபாஷ் ரணவேர் என்பவர்கள்) மராத்திய அரசின் அச்சகப் பதிவிதழில் (கெசட்டில்) நாங்கள் கிறிஸ்துவர்கள் அல்ல; எந்த மதத்தையும் சேராதவர்கள் என்று வெளியிட (கட்டணம் கட்டி) விண்ணப்பித்திருந்தார்கள்.

அவர்களது விண்ணப்பங்களை மராத்திய அரசும், அச்சகத்துறையும் ஏற்று வெளியிட மறுத்துவிட்டன. அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது.
எனவே, அவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) ஒன்றினைத் தாக்கல் செய்து, நீதி கேட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்டீஸ் அபய் ஒக்கா, ஜஸ்டீஸ் ஏ.எஸ்.சந்துர்கர் ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மேற்கூறியவாறு, அரசு யாரையும் மதத்தைப் போடவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது, தங்களுக்கு மதமில்லை (“No Religion”) என்று அறிவிப்பதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துவிட்டனர்!

மதம் என்ற கேள்விக்கு நேராக அரசின் எந்த மனுவையும், பூர்த்தி செய்யும்போது மதமற்றவர் எனக் குறிப்பிடலாம் _- இத்தீர்ப்பின்மூலம் மதம் என்பது சட்டப்படி தெளிவாக்கப்பட்ட தனி மனித உரிமையாகிவிட்டது!

எனக்கு எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இல்லை; நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல என்று கூறும் உரிமை ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு என்று ஆணியடித்த தீர்ப்பை மிகச் சிறப்பாக நாட்டோருக்கு அளித்துள்ளது!

மதச்சார்பற்ற (செக்குலர்) அரசின் கீழுள்ள மக்கள் மதங்களைச் சாராதவராகவோ, மதம் பிடிக்காதவர்களாகவோ இருக்க முழு உரிமையுடையவர்கள் ஆவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது _- இத்தீர்ப்பின் மூலம்.

இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆம் பிரிவின்கீழ் இவ்வுரிமை -_ அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்!

நாட்டில் மதங்களால் ஏற்பட்ட நன்மைகள் ஏதாவது இருப்பின், அது துளியளவே; ஆனால் தீமைகளோ மலையளவு!
வரலாற்றில் ரத்த ஆறு எப்பொழுதெல்லாம் ஓடியதாகக் கூறப்படுகிறதோ, காட்டப் படுகிறதோ அவை மதங்களால் உருவான சண்டைகளால்தானே!

உண்ணுதலில், உடுத்துவதில், எண்ணுதலில் எல்லாம் அன்றாட வாழ்க்கையில்கூட மதம் புகுந்து மனிதர்களிடையே வேற்றுமையைத்தானே உருவாக்கியுள்ளது!

யானைக்குப் பிடிக்கும் மதத்தைவிட ஆபத்தானது!
யானைக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேட்டைவிட, மக்களுக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேடுகளை, கலவரங்களை நாடு அன்றாடம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது!

எனவே, மதமற்ற மக்களாக வாழுங்கள், மதம் பிடிக்காத மனிதநேயம் உள்ளவர்களாக மாறுங்கள் தோழர்களே, தோழியர்களே!

Aucun commentaire:

Enregistrer un commentaire