mardi 9 octobre 2012

தடுமாறிய சம்பந்தன் 45 நிமிடத்திலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டதாகத் தெரிகின்றது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் விஷேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் கடுமையான வாதப் பிதிவாதங்களுடன் இடம்பெற்றதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சிக்கும் ஈ.பி.ஆர்.எல். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலேயே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று நாளை புதன்கிழமை புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காகவே இன்றைய கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

தமது இந்திய விஜயம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விளக்க முற்பட்டபோது குறுக்கிட்ட வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இந்தக் கூட்டம் 10 நாட்களுக்கு முன்னரே கூட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும், இந்தியா பயணமாகும் இறுதிவேளையில் கூட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.

இந்திய விஜயம் தொடர்பாக ஆராய்வதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டாலும் இந்தியா பயணம் செய்யும் குழுவினரது பெயர்கள் இன்று காலையே பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன எனவும் சுட்டிக்காட்டிய ஆனந்தன், அப்படியானால் தமிழரசுக் கட்சியினர் எல்லா முடிவுகளையும் எடுத்தபின்னர் பெயரளவுக்காக இந்தக் கூட்டம் கூட்டப்படுகின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.

கூட்டமைப்பின் சார்பில் இந்திய விஜயத்தை மேற்கொள்பவர்கள் யார் என்பதை கூட்டமைப்பில் உள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்களுமே கூடித் தீர்மானிக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், இப்போதைய தெரிவை தமிழரசுக்கட்சியே தான்தோன்றித் தனமாக மேற்கொண்டிருக்கின்றது எனவும் சாடினார்.

கூட்டமைப்பின் சார்பில் ஏழு போர் பதுடில்லி செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தவிர்ந்த ஏனைய ஐந்து பேரும் தமிரசுக்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்க முடியாது சம்பந்தன் தடுமாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த கூட்டம் சம்பந்தன் குழுவினர் தாமதமாக வந்தமையால் 3.45 மணியளவிலேயே ஆரம்பமானது. அதேவேளையில், தனக்கு மற்றொரு கூட்டம் இருப்பதால் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தை உடனடியாக முடியக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்த சம்பந்தன் சுமார் 45 நிமிடத்திலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டதாகத் தெரிகின்றது. இதனால் தமக்குப் பேசுவதற்கு கால அவகாசம் இருக்கவில்லை என மாற்றுக் கட்சியினர் தெரிவித்தனர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire