கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்து இப்போது அதன் அமர்வுகளும் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அது சார்பான தமிழ் ஊடகங்களும் இன்னமும் முஸ்லிம் காங்கிரஸ் மீது தமது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
கிழக்கு மாகாண சபையில் இணைந்து ஆட்சியமைக்க மு.கா வரவில்லை என்பதே இவ்விரு தரப்பினரதும் இக் காழ்ப்புணர்விற்குக் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இருந்தாலும் அதனைத் தொடர்ந்தும் செய்துவருவது அநாகரிகமாகவே தென்படுகிறது.
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட அதன் தலைவர்கள் பலரும் மு.காவைத் தமது அறிக்கைகளில் இஷ்டத்திற்கு திட்டித் தீர்த்து வருகின்றனர். அதனை அப்படியே பிரசுரிக்கும் அவர்களுக்குச் சார்பான கொழும்பு, யாழ் தமிழ் ஊடகங்கள் மற்றும் இணையத் தளங்கள் இது போதாதென்று தாமும் தமது உப்புச் சப்பில்லாத கருத்துக்களையும் முன்வைக்கின்றன. அதனை நியா யப்படுத்தும் வகையில் ஆசிரியர் தலையங்கங்கள், புனை பெயர்களில் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றன.
தமது கூட்டணிக்குள் கிளம்பியுள்ள உட்கட்சி மோதலைத் திசை திருப்புவதற்காக தமிழ்க் கூட்டமைப்பு இவ்விடயத்தைப் பெரிது படுத்த முனைவதாகவே சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இது தமிழ் – முஸ்லிம் மக்களின் எதிர்கால நல்லுறவிற்கு ஆரோக்கியமானதாகத் தென்படவில்லை. கிழக்கிலங்கையைப் பொறுத்தவரையில் பெரும் பான்மையான முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸே விளங்குகிறது. அது அண்மைய கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உட்பட நடைபெற்றுவரும் அனைத்துத் தேர்தல்களிலும் நன்கு புலனாகி வருகிறது.
இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதையும், அம்மக்களிடமிருந்து மு.காவை அந்நியப்படுத்தும் வகையில் அறிக்கைகளை விடுவதையும் இனியும் முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் அனுமதிக் கமாட்டார்கள். கடந்த தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்கள் ஒருவேளை வாக்களித் திருப்பார்கள். அதனை வைத்துக்கொண்டு முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாகவும் தாமே இருப்போம் என்று சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கும் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று.
முதலில் தமிழ்க் கூட்டமைப்பு தமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப செயற்பட முன்வர வேண்டும். தமிழுணர்வு விதைக்கப்பட்டதாலேயே தமிழ்க் கூட்டமைப்பிற்கு வாக்குகள் கிடைத்தன. அந்த உணர்வு மூலம் தமிழ் மக்களது எதிர் பார்ப்பு என்ன என்பதை கூட்டமைப்பினர் அறிய முற்பட வேண்டும். அதனை விடுத்து வாக்களித்த மக்களைப் புறந்தள்ளிவிட்டு வாக்களிக்காத, தமக்கென்று கட்சிகளை வைத்திருக்கும் முஸ்லிம் மக்களின் நலனைப் பேண முற்படுவது சகல தரப்பையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே கருத இடமுண்டு.
தேர்தல் காலத்தில் மு.கா அரசை விமர்சித்து பிரசாரம் செய்தபோதும் அவர்கள், அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணியே வந்தனர். அமைச்சரவையில் அதன் தலைவர் முக்கியமான அமை ச்சுப் பதவியை வகித்து வருகிறார். தேர்தலின் பின்னர் அரசாங் கத்துடன் சேர்வோம் என்பதை அவர்கள் நாசூக்காக தமது மக்களுக்குத் தெரிவித்துக் கொண்டே செயற்பட்டு வந்தனர். அத் துடன் மு.கா தலைவர் தனது தேர்தல் மேடைகளில் தமிழ்க் கூட்டமைப்புடன் சேருவதில் பாரிய சிக்கல்கள் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். தமிழர் பிரச்சினை வேறு, முஸ்லிம் மக்களது பிரச்சினை வேறு என்பதை மு.கா தலைவர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
உண்மையில் அதுதான் உண்மை. தமிழ் – முஸ்லிம் மக்களது பிரச்சினைகளை ஒன்றாக ஒரு தரப்பினரால் தீர்த்து வைக்க முடியும் என்ற காலம் எப்போதோ மலையேறி விட்டது. இப்போதுள்ள சூழலில் தமிழர் தரப்பு தனியாகத் தமது பிரச்சினைகளையும், முஸ்லிம் தலைமைகள் தமது மக்களது பிரச்சினைகளைத் தனித் தரப்பாகவும் அரசாங்கத்துடன் பேசித் தீர்வுகளைக் காணும் நிலையே இன்றுள்ளது. தமக்குள் இவ்விரு தரப்பினரும் பேசி ஒரு நிலைப் பாட்டிற்கு வர முடியுமே தவிர தமிழருக்காக முஸ்லிம் தலை வர்களோ அல்லது முஸ்லிம்களுக்காக தமிழ்த் தலைவர்களோ இனப்பிரச்சினை சார்பாக பேச முடியாது.
இந்நிலைமையை ஏற்படுத்தியமைக்கு இருதரப்பினருமே காரணம் எனினும் தமிழ்த் தரப்பு மீது இவ்விடயத்தில் அதிக குற்றச்சாட்டைச் சுமத்த முடியும். இன்று முஸ்லிம் மக்கள் மீது திடீர் அக்கறை காட்டும் தமிழ்க் கூட்டமைப்பு புலிகளின் காலத்தில் இந்த அக்கறையைக் காட்டாது வாய் மூடிகளாக இருந்தமையை முஸ்லிம் மக்களால் மறந்துவிட முடியாது. அவ்வேளைகளில் முஸ்லிம் தனித்தரப்பு விடயத்தை ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தமையையும் அம்மக்களின் தலைமைகள் ஞாபகப்படுத்துகின்றன.
எனவே இப்போது எல்லாமே காலம் கடந்த விடயங்களாகி விட்டன. இந்நேரத்தில் தமிழ்க் கூட்டமைப்பு தமது தேவைக ளுக்காக, முஸ்லிம்களைத் துணைக்கு இழுப்பதற்காக அம்மக்களில் பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்டிருக்கும் மு.கா வை விமர் சிக்காது முதலில் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து செயற்பட வேண்டும். தமிழ்க் கூட்டமைப்பு, மு.கா வை பல பல கோணங்களில் விமர்சித்த போதிலும் மு.காவின் தலைவரோ, உயர்பீட உறுப்பினரோ அல்லது சிறு தொண்டனோ அல்லது அக்கட்சிக்கு வாக்களித்த எந்தவொரு குடிமகனோ இதுவரை வாயே திறக்கவில்லை.
தலைமையின் சாணக்கியத்தால் கட்டுண்டுள்ள தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் நீண்ட காலத்திற்கு அடக்கி வைத்திருக்க முடியாது. எனவே தமிழ்க் கூட்டமைப்பினரும், அவர்களது அறிக்கைகளை வெளியிடுவதற்காகக் காத்துக் கிடக்கும் தமிழ் ஊடகங்களும் இனியாவது தமது மக்களின் தேவைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்க முன்வர வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் தமது தேவைகளுக்கு முஸ்லிம் தலைமைகளின் உதவியை நாட வேண்டிய நிலையே ஏற்படும்.
தினகரன்
Aucun commentaire:
Enregistrer un commentaire