jeudi 14 janvier 2016

மேதை போல சிறிசேனா செயல்படுகிறார் : பிரதமர் மோடி

 அரசியல் மேதை போல சிறிசேனா செயல்படுகிறார் : பிரதமர் மோடி பாராட்டு
இலங்கைக்கு, 2 நாள் பயணமாக சென்ற இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பு நகரில் ஜனாதிபதி சிறிசேனாவை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஜனாதிபதியிடம், ”கடந்த வாரம் நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை இலங்கை மக்கள் மட்டும் அல்ல, டெல்லியில் நாங்களும் மிகவும் பாராட்டினோம்” என்று குறிப்பிட்டார்.
இலங்கையின் ஒற்றுமைக்காக சிறிசேனா அரசு கடந்த ஒரு ஆண்டாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அணுகுமுறைகள் இந்தியாவுக்கு திருப்தி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து இலங்கை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், சிறிசேனா பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் மோடி சார்பில் இந்திய வெளியுறவு செயலாளர் வாழ்த்து தெரிவித்தார் என்றும், இலங்கையின் ஒற்றுமைக்காக ஒரு சிறந்த அரசியல் மேதை போல சிறிசேனா செயல்படுகிறார் என்று மோடி பாராட்டியதாகவும் தெரிவித்தன.
அப்போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, மறுகுடியேற்றம், ரயில்வே, மின்சக்தி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு உதவி செய்து வருவதற்காக இந்தியாவுக்கு சிறிசேனா பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தனையும் கொழும்பு நகரில் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் இலங்கை அரசின் புதிய அரசியலமைப்பு சட்டம் குறித்து விவாதித்தனர்.
இந்த சட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், வட பகுதி மக்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சினை, மறுகுடியேற்ற நடவடிக்கை, வடக்கில் ராணுவம் நிலை கொண்டிருப்பது உள்ளிட்டவை பற்றி சம்பந்தன், இந்திய வெளியுறவு செயலாளரிடம் விரிவாக விவரித்தார்.
இவற்றை பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஜெய்சங்கர் உறுதி அளித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறின.

Aucun commentaire:

Enregistrer un commentaire