
ஆப்கானிஸ்தானில் தொடரும் வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையில் கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக வீழ்ச்சி கண்டிருப்பதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆப்கானுக்கான ஐ.நா.வின் உதவித் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2012 ஆம் ஆண்டில் ஆப்கான் யுத்தத்தால் 7,559 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இதில் 2,754 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு ஏனையோர் காயமடைந்துள்ளனர்.

இது 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 வீத வீழ்ச்சியாகும். 2011 இல் ஆப்கான் யுத்தத்தால் 3,131 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கடந்த 6 ஆண்டுகளில் ஆப்கானில் தொடரும் வன்முறைகளால் மொத்தம் 14,728 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானில் தரைவழி யுத்தம், தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் வான் தாக்குதல்கள் குறைவடைந்ததாலேயே பொதுமக்கள் மரணம் வீழ்ச்சி கண்டிருப்பதாக மேற்படி அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.சிவிலியன்களின் பாதிப்பு ஆப்கானில் குறைவடைந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் மோதலில் மனித பலி ஏற்க முடியாதது என்று ஆப்கானுக்கான ஐ. நா. விசேட பிரதிநிதி ஜான் குபிஸ் குறிப்பிட்டார்.
2012 இல் ஆயுதக் குழுக்களின் தாக்குதலால் 80 வீதமான சிவிலியன்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு 8 வீதமான பாதிப்பு அரச ஆதரவு படைகளால் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டோருள் 301 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 563 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire