இனப்படுகொலை செய்துள்ள இலங்கை ஜனாதிபதியை கூண்டிலேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தவுள்ளதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.இது குறித்த அவரது அறிக்கை:
மனிதகுலம் இதுவரை கண்டிராத வகையில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளை இலங்கை அரசு நடத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் தமிழர்களின் இதயங்களை பிழியும் வகையில் உள்ளன.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகனான பாலச்சந்திரன் இலங்கைப் படையினரால் பதுங்கு குழியில் பிடித்து வைக்கப்பட்டு, சிறிதும் இரக்கமில்லாமல், காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆதாரமான புகைப்படங்களை சேனல் - 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டது.
காண்போர் அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவியை பெருக்கெடுக்கவைத்த அந்த புகைப்படங்கள் மட்டுமே, இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு போதுமானவை ஆகும்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களும், போருக்கு பின்னர் சிங்களப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகளும் எவ்வளவு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்; போருக்கு முன்பும், போருக்கு பின்பும் தமிழ் சகோதரிகள் எப்படியெல்லாம் இரக்கமில்லாமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
என்பதற்கும் பல்வேறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இலங்கை அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை என்பதுடன், பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்களே போலியானவை என்றும், அவை வெட்டி ஒட்டப்பட்டவை என்றும் தில்லியில் அமர்ந்து கொண்டு இலங்கை தூதர் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்.
மிகக் கொடுமையான இந்த மனித உரிமை மீறலை கண்டிக்கவேண்டிய இந்திய அரசோ, அந்தப் புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றி எதுவும் தெரியவில்லை என்று கூறிவிட்டு மவுனம் காக்கிறது. இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் அந்நாட்டை காப்பாற்றுவதையே கடமையாக கொண்டிருக்கும் இந்தியா, அதன் போக்கை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய சூழலில், ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும்போது இந்திய அரசு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.
கொடுங்குற்றம் செய்த இலங்கை ஜனாதிபதியை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உள்ளது. எனவே, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்.
அந்நாட்டு ஜனதிபதியை சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரித்து தண்டிக்க வேண்டும் - இதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26-ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு சென்னையிலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடத்தப்படவுள்ளது.
சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைமையேற்பார்கள். இப்போராட்டங்களில் பா.ம.க.வினரும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire