சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் – ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கீழ் செயற்படும் சிறப்புக் குழுவை நியமித்தல், பொருளாதாரத் தடையை விதித்தல் உள்ளிட்ட பல இறுக்கமான யோசனைகளை கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானத்தின் பிரதிகள், கடந்தமுறை தீர்மானத்தை ஆதரித்த நாடுகளின் தூதுவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பரிமாறப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் ஜனநாகத்தை உறுதிப்படுத்துவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கீழ் செயற்படும் சிறப்புக் குழுவொன்றை நியமிப்பதென்றும், இந்தக் குழு சிறிலங்காவில் இருந்தே செயற்படுவதென்றும், இந்தத் தீர்மானத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரியமுறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்துதல், மனிதஉரிமைகளைப் பாதுகாத்தல், ஆட்கள் காணாமல்போவதை தடுத்தல் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தை உறுதிசெய்தல் போன்றவற்றை வலியுறுத்தவும் இந்தத் தீர்மானத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இவைதவிர, வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரைக் குறைத்தல், வடக்கு, கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிரந்தர வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல், ஆட்களைக் கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் கொள்கைகளை அனைத்துலக சட்டங்களுக்கு அமைய அமைத்தல், கருத்து சுதந்திரத்தை உறுதி செய்தல் மற்றும் மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்குதல் தொடர்பான பல யோசனைகளும் இந்தத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கும் யோசனையும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.
அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தீர்மான முன்மொழிவு அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் திருத்தம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தகவல் வெளியிட்டுள்ளன.
Aucun commentaire:
Enregistrer un commentaire