பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமுறை அழைத்தபோதும் அவர்கள் வந்து இணைந்து கொள்ளவில்லை. இதனால்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படாமல் நீண்டகாலம் இழுபடுவதாக லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிரேஷ்ட அமைச்சர் யாழ். யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போதே அமைச்சர் இக்கருத்தை வலியுறுத்தியிருந்தார்.இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று சொல்லுகின்றனர். ஆனால் அதனை இலங்கையில் உள்ள அரச தலைவருடன் பேசி ஒரு தீர்வுத் திட்டத்தை வைக்க முனைவதும் இறுதியில் சிறிய ஒரு பிரச்சினையை காரணங்காட்டி வெளியேறுவதுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் ஒருபோதும் தமிழர்களுக்கான ஒரு சரியான தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் இது தொடர்பில் பல முறை தெரிவித்திருக்கிறேன். தெரிவுக்குழுவில் இணைந்து தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை முன்வையுங்கள். அதன் மூலமே நல்லதொரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றேன். தற்போது தெரிவுக்குழுவில் அரசுடன் சமசமாஜக் கட்சி, புதிய லெனின் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஈ.பி.டி.பி., முஸ்லிம் காங்கிரிஸ் என பல கட்சிகள் இருக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டால் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கொள்ளும் என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
இது நல்ல ஒரு சந்தர்ப்பம். இதனை பயன்படுத்தி தெரிவுக்குழுவில் இணைந்து தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வுத் திட்டத்தை வழங்க முடியும்.தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் காணப்படுவதுடன் ஜனாதிபதியும் ஒரே கட்சியாக காணப்படுவதால் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். இந்த நல்ல சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நழுவ விடுமானால் இந்த விவகாரம் மேலும் காலம் தாழ்த்தப்படும்.
கடந்த முறை அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற தயாராக இருந்த போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளாது இருந்ததால் இது செயலிழந்து போனது எனவும் குறிப்பிட்டார்.13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி பாராளுமன்றத் தெரிவுக்குழுவை கூட்டி அரசியல் தீர்வை விரைந்து காண்பதன் மூலம் நன்மை கிடைக்கும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதும் வெளிநாடுகள் தீர்வை பெற்றுத்தரும் என எண்ணுகின்றார்கள். இது மாற்றம் பெற வேண்டும். தற்போது கூட்ட¨மைப்பு இரண்டாக காணப்படுவதற்கும் இந்த வெளிநாடுகளே காரணம். தெளிவாக இருங்கள். இலங்கை நான்கு பக்கமும் நீரால் சூழ்ந்த ஒரு பிரதேசம். அதுமட்டுமல்ல இயற்கை வளம் பொருந்திய ஒரு நாடு. அதனால் இலங்கை முன்னேறுவதற்கு ஒரு நாடும் விடாது.
ஏதோ ஒரு பிரச்சினையை தோற்றுவித்துக் கொண்டு தான் இருக்கும். தமிழ் மக்களுக்கு பிரச்சினை தீர்ந்து விட வெளிநாடுகள் ஒரு போதும் விடப்போவதில்லை. எனவே வெளிநாடுகளின் சொல்லுக்கு தலையாட்டாது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண.
மேலும் கிராமமட்ட அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் ஒரு சிறந்த முறையில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். எனவே அவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ள வேண்டுமெனவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்
Aucun commentaire:
Enregistrer un commentaire