அடைக்கலம் தேடி படையினர் பக்கம் ஓடிவந்த மக்களை எல்.ரீ.ரீ.ஈ சுட்டுக்கொன்றது
இராணுவ தளபதி நியமித்த இராணுவ நீதிமன்றம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது
யுத்தக்குற்றங்களை இராணுவத்தினர் புரிந்தனர் என்ற சனல் 4 தொலைக்காட்சியில் வெளிவந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இராணுவ நீதிமன்றம் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடைப்பிடிக்குமாறு இராணுவத்தினருக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் எல்.ரி.ரி.ஈ.யினரே யுத்தத்தின் இறுதி நாட்களில் பொதுமக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ததுடன் எறிகணை தாக்குதலையும் மேற்கொண்டு பல அப்பாவி மக்களை படுகொலை செய்தனர் என்றும் தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி சேவையில் இலங்கைக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் தனது விசாரணை அறிக்கையை இராணுவத் தளபதிக்கு நேற்று சமர்ப்பித்தது.யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்தினர் மக்கள் இருந்த பகுதியை நோக்கி பெருமளவு பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டதனால் பொதுமக்கள் மரணித்தார்கள் என்ற குற்றச்சாட்டை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நியமித்த இந்த இராணுவ நீதிமன்றம் அதன் அறிக்கையை நேற்று வழங்கியுள்ளது.
இராணுவ நீதிமன்றத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவும், ஏனைய உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேராஇ பிரிகேடியர் ருவன் குலதுங்க, பிரிகேடியர் ருவன் டி சில்வாஇ பிரிகேடியர் அருண விஜேவிக்ரம ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். செயலாளராக லெப்டினட் கேர்ணல் லலித் ஹேரத் நியமிக்கப்பட்டிருந்தார்.
இராணுவ நீதிமன்றம் தங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலனை செய்து 1990களில் இருந்தே கடைப்பிடிக்கப்படும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைய சகல படை வீரர்களும் யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு தீங்கிழைக்காத விதத்தில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டனர். சர்வதேச மனிதாபிமான சட்டத்தை சிறந்த முறையில் கடைப்பிடிக்க வேண்டுமென்பது குறித்து நல்ல முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இது முதலில் சுட்டிக்காட்டியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஒரு பொதுமகன் கூட யுத்தத்தின் போது மரணிக்கக்கூடாது என்ற உத்தரவு எந்நேரமும் சரியான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. சில இடங்கள்
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதை தடை செய்யும் வலையங்களாகவும் பிரகடனம் செய்யப்பட்டிருந்தன.துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளக்கூடாது என்று தடை விதித்துள்ள பிரதேசத்தில் இருந்து புலிகள் படைகளை தாக்கினாலும் எமது இராணுவத்தினர் அவர்களை நோக்கி பதில் துப்பாக்கி பிரயோகம் செய்வதை தவிர்த்துக் கொண்டார்கள். இராணுவத்தின் பீரங்கி படைப் பிரிவினர் தாக்குதல் நடத்தக்கூடாத பகுதியாக இருந்த பகுதியின் எல்லையிலிருந்து மேலும் 500 மீற்றர் தொலைவினை தாக்குதல் நடத்தக்கூடாத பிரதேசமாக கருதி அங்கு தாக்குதல் நடத்துவதை தவிர்த்தே மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் இருந்த அந்த எல்லைப்புறம் துப்பாக்கி சூடு நடத்தக்கூடாத சூனிய பகுதியிலிருந்து 500 மீற்றர் இடைவெளியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.மனிதாபிமான முறையில் யுத்தம் நடைபெற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் இராணுவத்தினர் மிகவும் ஒழுக்கமான முறையில் நடந்து கொண்டதுடன் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடைப்பிடித்திருப்பதை இந்த விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த விசாரணையின் போது எல்.ரி.ரி.ஈ.யினர் மேற்கொண்ட யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.எல்.ரி.ரி.ஈ.யினர் மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தியது தங்கள் பக்கத்தில் இருந்து அரசாங்க பக்கத்திற்கு ஓடியவர்களை இரக்கமின்றி சுட்டுக் கொன்றது, சிறுவர்களை பலவந்தமாக படையில் சேர்த்துக் கொண்டது போன்ற பல குற்றச் செயல்கள் இந்த விசாரணையின் போது தெரியவந்தது.
சர்வதேச சமூகம் எல்.ரி.ரி.ஈ.யினர் யுத்தக் குற்றங்களை தடுக்க வேண்டிய தனது கடமையில் இருந்து தவறிவிட்டதென்று இராணுவ நீதிமன்றம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியது.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துறையில் குறிப்பிடப்பட்டுள்ள பீரங்கி தாக்குதலினால் மக்கள் மரணித்தார்கள் என்ற கருத்து உண்மையிலேயே எல்.ரி.ரி.ஈ. இயக்கம் மேற்கொண்ட சட்ட விரோத செயற்பாடுகளினால் தான் இடம்பெற்றது என்றும் இராணுவ நீதிமன்றம் தெரிவித்தது
தங்கள் தரப்பில் இருந்து மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினரிடம் அடைக்கலம் தேடி தப்பியோடியோர் மீது எல்.ரி.ரி.ஈ.யினர் மேற்கொண்ட தாக்குதலினால் தான் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும் எல்.ரி.ரி.ஈ.யினர் பயிற்சி பெறாத போராளிகளிடமும் தரம்குறைந்த பீரங்கிகளை இயக்கச் செய்ததனால் அவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
எல்.ரி.ரி.ஈ.யினர் தங்கள் படையணியை பெருக்கிக் கொள்வதற்காக சிறுவர்களையும், வயோதிபர்களையும் போராளிகளாக சேர்த்துக் கொண்டதும் இன்னுமொரு இராணுவக்குற்றச் செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.சனல் 4 குற்றச்சாட்டின் முதலாவது பகுதியை விசாரணை செய்து இராணுவ நீதிமன்றம் இவ்வறிக்கையை கையளித்துள்ளது. 2வது பகுதியை பின்னர் விசாரணை செய்து இந்த நீதிமன்றம் இன்னுமொரு அறிக்கையை வெளியிடும். கைது செய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ. போராளிகள் விசாரணையின்றி கொல்லபட்டதாக இரண்டாவது பகுதியில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கையை இராணுவத்தளபதி மீளாய்வு செய்த பின்னர் அவர் இதுபற்றிய அறிக்கையை தனது கருத்துக்களையும் இணைத்து பாதுகாப்பு செயலாளரிடம் விரைவில் கையளிக்கவுள்ளார்
Aucun commentaire:
Enregistrer un commentaire