இலங்கையில் இந்து கோயில்களை இடிக்கும் நடக்கும் கொடுமைகளுக்கெல்லாம் அமெரிக்கா கொண்டுவரும் ஐ.நா., தீர்மானத்தின் மூலமாவது விடிவு ஏற்படுமா? என தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் வாழும் கிராமங்களுக்கு இருந்த தமிழ்ப்பெயர்களை சிங்களப்பெயர்களாக அந்நாட்டு அரசு மாற்றி வரும் நிலையில், தற்போது அங்கு 367 இந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள கோயில்கள் உட்பட அனைத்து நினைவுச் சின் னங்களையும் ஒழிப்பது என்ற கொள்கை முடிவினை ராஜபக்சே அரசு எடுத்திருப்பதாகவும், தமிழர்கள் வாழ்ந்த இடங்களின் அடையாளங்கள் அனைத்தையும் அழித்து விட்டு, அந்த இடங்களில் சிங்களர்களை குடியேற்றும் பணியினைச் செய்து வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் மட்டும் 208 கோயில்கள் இதுவரை தரை மட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வந்துள்ளன. இதே போல், திரிகோணமலை, வவுனியா, மன்னார், அம்பாரை போன்ற மாவட்டங்களிலும் பல கோயில்கள் இது போல் இடிக்கப்பட்டுள்ளன. இந்த கொடுமைகளுக்கெல்லாம் அடுத்த மாதம் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் மூலமாவது விடிவு ஏற்படுமான என்பது தான் இன்றைய கவலை.
மேலும், இலங்கை அரசு தொடர்ந்து செய்து வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையில், இலங்கையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ள ''காமன் வெல்த்'' மாநாட்டை, புறக்கணிக்கப் போவதாக கனடா போன்ற நாடுகள் எச்சரித்துள்ளன. இந்தச் செய்திகள் எல்லாம் இலங்கை ராஜபக்சே அரசின் கொடுமைகளை உலக நாடுகள் புரிந்து கொள்ளத் துவங்கியிருக்கின்றன என்பதை உணர்த்துவதால், அது நமக்கு நம்பிக்கை அளிக்கின்றது. இதையெல்லாம் தெரிந்து தான் கோத்தபயா ராஜபக்சே, "இலங்கைக்கு எதிராகச் செயல்படும்படி உலக நாடுகளை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நிர்ப்பந்திக்கின்றனர். சர்வதேச அளவில் அவர்கள் ஜனநாயகவாதிகள் போன்ற முகத்தைக் காட்டி வந்தாலும், அவர்கள் இலங்கைக்கு எதிராக மீண்டும் தாக்குதல் தொடுக்கக் கடுமையாக முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜெனிவாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை முனை மழுங்கச் செய்திடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபடத் துவங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இலங்கை அதிபர் ராஜபக்சே எப்படிப்பட்ட தந்திரோபாயங்களைக் கையாண்ட போதிலும், உலக நாடுகளின் கண்டனத்திலிருந்தும், தண்டனையில் இருந்தும் தப்பி விட முடியாது என்பதே உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் நம்பிக்கையாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire