mercredi 6 février 2013

பிரான்ஸ் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரினால் 4 இஸ்லாமியர்கள் கைது!!


பிரான்ஸ் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரினால் தீவிரவாதிகள் எனும் சந்தேகத்தில் நான்கு இஸ்லாமியர்கள் நேற்று பாரிஸில் கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர்கள் மேற்கு ஆபிரிக்காவில் இயங்கி வரும் இஸ்லாமியப் போராளிகளின் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என பிரான்ஸ் பயங்கரவாத தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் கொங்கோவைச் சேர்ந்த பிரெஞ்சு மக்கள் (Franco-Congolese) எனவும், எஞ்சியவர் மாலியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து பிரான்ஸின் உள்துறை அமைச்சர் மானுவெல் வால்ஸ் எச்சரிக்கை விடுக்கையில், பிரான்ஸில் தாக்குதல் நடத்தவோ அல்லது புதிதாக ஏதும் சதித்திட்டம் அரங்கேற்றவோ ஜிஹாதிஸ்ட் வலையமைப்பு முயன்றால் பிரான்ஸ் அவர்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது எனக் கூறியுள்ளார்.

தற்போது பிரான்ஸின் படை வீரர்கள் மாலியில் உள்ள இஸ்லாமியப் போராளிகளுடன் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. மாலியில் பிரான்ஸின் படை நடவடிக்கை குறித்து மானுவெல் கூறுகையில் தமது மண்ணில் தாக்குதல் நடத்தவோ அல்லது தமது மக்களை ஜிஹாத் பெயரில் கடத்தவோ திட்டமிடும் அனைத்து தீவிரவாதிகளும் போராடத் தேவையான ஆயுதங்களைப் பெற முடியாத வகையில் பிரான்ஸ் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இவர் மேலும் கூறுகையில் அல்-கைதாவுடன் தொடர்புடைய சில குழுக்களுடன் சில பிரெஞ்சு மக்களும் சேர்ந்து பணியாற்றுவதாகவும் ஆனால் அவர்கள் எவரிடம் இருந்தும் நேரடி அச்சுறுத்தல் எதுவும் பிரான்ஸுக்கு இல்லை என்றும் கூடத் தெரிவித்தார். இன்னமும் சொல்லப் போனால் இணையம் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலமாக விடுவிக்கப் படக்கூடிய அச்சுறுத்தல்கள் கூட இதுவரை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மாலிக்கு பிரெஞ்சுப் படைகள் உதவுவதற்குச் சென்றதன் பின்னர் பிரான்ஸ் தனது நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் அபாய நிலையை சிறிது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire