vendredi 27 décembre 2013

24.12.2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் பின்கதவால் வந்தது தமிழர்களின் விதியை தீர்மானிக்க இனப்படுகொலை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை

இனப்படுகொலை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை -சுமந்திரன், பின்கதவால் வந்த சுமந்திரன் தமிழர்களின் விதியை தீர்மானிக்க முடியாது!..-
இனப்படுகொலை பற்றிப் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

வவுனியாவில் 24.12.2013 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு  காலை 10.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரை வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆனால் ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

(ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் தனது லண்டனில் வாழுகின்ற மனைவி, பிள்ளைகளுடன் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சென்றுள்ளார் எனவும், ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது பிள்ளைகளுடன் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஜெர்மனி நாட்டுக்கு சென்றுள்ளதாகவும் கொழும்பு “ரெலோ” வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.)

ஊடகவியலாளர்கள் முக்கிய கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே வெளியேற்றப்பட்டு மண்டப வாயில் கதவுகள் பூட்டுப்போட்டு அடைக்கப்பட்டதோடு, பிரதான நுழைவாயிலில் சிறீலங்காவின் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தாம் வெளியேற்றப்பட்டமைக்கு ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். மீண்டும் மாலை 6.00 மணிக்கு ஊடகவியலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், அனந்தி, சித்தார்த்தன், ரவிகரன் ஆகியோர் வேறு வேலைகள் காரணமாக வெளியேறிச் சென்று விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. செய்தியாளருக்கான கூட்டத்தை வழமைக்கு மாறாக சுமந்திரன் நடத்தியிருந்தார். இங்கு கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஓரங்கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கேள்விகளுக்கான பதில்களை வேண்டாவெறுப்பாக சம்பந்தர் வழங்கியிருந்தார்.

கூட்டத்தில் காணி அபகரிப்பு, பெண்கள் மீதான வன்முறைகள், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ பிரசன்னம், வலி.கிழக்கு மற்றும் சம்பூர் பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் என்பன பற்றி கலந்துரையாடப் பட்டதாகவும் குடிசன தொகை மதிப்பு திணைக்களத்தின் புள்ளிவிவர திரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், தெரிவுக்குழுவுக்கு வருமாறு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்தல், கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள உள்ரூராட்சி சபைகளின் வரவு – செலவு திட்டங்களுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் கூட்டமைப்பின் அங்கத்தவர் பதவிகள் பறிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்புதல் உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் சுமந்திரன் ஒரு பட்டியலை மும்மொழிகளிலும் வாசித்துக் காட்டினார்.

தொடர்ந்து கூட்டத்தை கலைத்து அவசரமாக எழுந்து செல்ல முற்பட்ட சம்பந்தனை நோக்கி ஊடகவியலாளர்கள் கேள்விகளை தொடுத்திருந்தனர். இரணைமடு குடிநீர் விநியோகம் பற்றி பி.பி.சி ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் கேள்வி எழுப்பியதற்கு, அதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக சம்பந்தன் பதிலளித்தார்.

ஆனந்தசங்கரி கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பற்றி மற்றுமொரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, “ஊகங்களுக்கு தன்னால் பதிலளிக்க முடியாதெனவும், தூரவழிப்பயணம் போக இருக்கிறது, இரவாகி விட்டது” எனக்கூறிக்கொண்டு ஊடகவியலாளர்களை அசட்டை செய்தவாறு சம்பந்தன் எழுந்து நடையை கட்ட, அவரை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை அமைச்சர்களும், உறுப்பினர்களும் ஒப்புக்கு சிரித்தவாறு நடையைக் கட்டினர்.

ஆனால் ஊடகவியலாளர்களை வெளியேற்றி கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு அவசரமாகக் கூடி கலந்துரையாடப்பட்டு வெளியிடப்படாத முக்கிய விடயங்கள்தான் என்ன?

ஆரம்ப நிகழ்வுகளையடுத்து ஊடகவியலாளர்களை பலவந்தமாக வெளியேற்றினார் சம்பந்தன். ஆனால் இதுபற்றி கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் எம்மிடம் தகவல் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

இக்கூட்டத்தில் சுமந்திரன் கருத்துரைக்கையில், “இனப்படுகொலை என்னும் சொற்பிரயோகத்தை பாவிக்க வேண்டாம் என்றும், இனப்படுகொலைக்கான தகுந்த ஆதாரங்கள் இதுவரை இல்லை என்றும், அப்படி கூறினால் வெளிநாடுகளுக்கு அதுபற்றிய தகுந்த ஆதாரங்கள் கொடுக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், “எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மனிதவுரிமை கூட்டத்தொடரில் தமிழர்களுக்கு ஆதரவாக அமையும் என்று கூறமுடியாதென்றும், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சிறீலங்காவுடன் பேசவேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இக்கருத்துக்கு சிவாஜிலிங்கம், அனந்தி மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் சுமந்திரனின் கருத்துக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டதுடன், சிறீலங்காப் படையினரால் பாடசாலைகளில் குண்டு போட்டு பள்ளிச்சிறுவர்கள் கொல்லப்பட்டமை, சிறைகளில் நடைபெறும் படுகொலைகள் என்பனவற்றை சுட்டிக் காட்டியிருந்தார். மேலும், அனந்தி அவர்கள் ஜேர்மனில் நடைபெற்ற மக்கள் தீர்பாயத்தையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

இவ்வாறாக இக்கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது..!

“பின்கதவால் அரசியலுக்கு வந்த சுமந்திரன் தற்போது தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் ஆதிக்க வெறியர்களின் அடிவருடியாக இருக்கின்றார். இவர் தமிழர் வரலாற்றில் இன்னும் ஒரு துரோகியாகவே இடம்பிடிப்பார். இரத்தமும் சதையுமாக போராடி தற்போது துன்பத்துள் வீழ்ந்திருக்கும் தமிழினத்தின் வேதனைகள் இப்படியான மெத்தப்படித்த கனவான்கள் அறியமாட்டார்கள்.

சர்வதேசத்திடம் தகுந்த ஆதாரங்கள் கண்முன்னே காட்டப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சுமந்திரனின் கருத்துக்கள் சிறீலங்காவை மட்டுமல்ல இனப்படுகொலைக்கு ஆதரவாக நின்றவர்களையும் காப்பாற்றும் நோக்கமாகவே பார்க்கலாம். இதற்கு சுமந்திரன் நிச்சயமாக பெரும் சன்மானத்தை பெற்றுருப்பார்.

ஆனால் சுமந்திரன் நினைப்பது போன்று மக்களின் பிணங்களின் மேலிருந்து அவரால் நீண்ட காலத்திற்கு அரசியல் செய்ய முடியாது. காலம் எம்மை விடுவிக்கும். தமிழர்களின் போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை”.. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் எம்மிடம் தெரிவித்தார்.                                           செய்தியாளர் கானகன்-

Aucun commentaire:

Enregistrer un commentaire