jeudi 19 décembre 2013

பேரழிவை விளைவிக்கக் கூடிய சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை கடலில் அழிக்க முடிவு

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் பொதுமக்கள் மீது சிரியா ராணுவம் ரசாயன குண்டுகளை வீசியது. அதில் சுமார் 700 பேர் பலியாகினர்.
இது சர்வதேச நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாரானது. ரஷியாவின் முயற்சியால் ரசாயன ஆயுதங்களை அழிக்க சிரியா சம்மதித்ததால் இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து, ஐ.நா.சபை பிரதிநிதிகள் சிரியாவில் உள்ள ரகசிய கிடங்குகளில் சோதனை நடத்தி ரசாயன ஆயுதங்களை கண்டுபிடித்து கைப்பற்றினர். அதை கப்பலில் எடுத்து சென்று கடலில் வீசி, செயல் இழக்க செய்து அழிப்பதற்கு சர்வதேச ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்காக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எம்.வி.கேப் ரே என்ற கப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மனித இனத்துக்கே கடும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய சிரியா வசமுள்ள ரசாயன ஆயுதங்களை ஒழிக்கும் பணியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, நார்வே, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் ஒன்று திரண்டுள்ளன.
ரசாயன ஆயுதங்களை கொண்டு செல்வதற்காக 3 ஆயிரம் கண்டெய்னர்களை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அவற்றை கடற்பகுதிக்கு கொண்டு செல்ல தேவையான வாகனங்களை ரஷ்யா வழங்குகிறது. அவை பத்திரமாக கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை அமெரிக்காவின் ஜி.பி.எஸ். கருவிகளும், சீனாவின் நவீன கண்காணிப்பு கேமராக்களும் தொடர்ந்து கண்காணிக்கும்.
பேரழிவை விளைவிக்கக் கூடிய இந்த ஆயுதங்களை ரஷ்ய வாகனங்கள் கொண்டு செல்லும் வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய வகையில் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட 10 ஆம்புலன்ஸ்களை கூடவே அனுப்பி வைக்க சீனா சம்மதித்துள்ளது.
சிரியா வசம் உள்ள கடுகு விஷவாயு, சரின் மற்றும் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை பாதிப்புக்குள்ளாக்கும் இதர ரசாயன ஆயுதங்கள் சுமார் ஆயிரம் டன்னுக்கு மேல் இருக்கும் என தெரிய வந்துள்ளது. அவற்றை இம்மாதம் 31-ம் தேதிக்குள் சிரியாவில் இருந்து வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனம் முழுமூச்சாக எடுத்து வருகிறது.
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற இந்த நிறுவனம், சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணிக்காக 13.47 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட முன்வந்துள்ளது. மேலும், இந்த பணிக்காக தங்கள் நாட்டின் சார்பில் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இதற்காக பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதில் ஜப்பான் அரசு அக்கறை காட்டி வருகிறது.
இந்த தொகையை கொண்டு சிரியா வசமுள்ள பெரும்பாலான ரசாயன ஆயுதங்களை அடுத்த (2014) ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளாகவும், ஒட்டுமொத்த ஆயுதங்களை ஜுன் மாதம் 30-ம் தேதிக்குள்ளாகவும் அழித்துவிட ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire