vendredi 18 mai 2012

உதவத் தயார்: ரணில்

அரசியல் தீர்வை மையப்படுத்திய பாராளுமன்ற தெரிவுக் குழுவின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்டுள்ளதுடன் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கத்திற்கு உதவத் தயாராகவே உள்ளோம். ஆனால் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையினைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.

யுத்தத்தின் போது வன்னியில் இரண்டு இலட்சம் பேர் மாத்திரமே பட்டினியில் கிடந்தார்கள். ஆனால் இன்று நாட்டில் இரண்டு கோடி மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். நிவாரணங்களை எதிர்பார்த்த மக்களுக்கு மரணத்தையே அரசு பரிசாக்கியுள்ளது. எனவே எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லையென்றால் கடும் போராட்டங்களை அரசு எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஐ.தே.க. வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க மேற் கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மனிதப் புதைகுழிகள்

""தெல் கந்த'' பொதுச் சந்தையினை சுவீகரிப்பது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் தலை தூக்கியுள்ளன. அதேபோன்று பல்வேறு துறைகளிலும் மக்கள் பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர். அரசாங்கத்தினால் பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம்ப இயலாது. புதையலை எடுத்துக் கொண்டு அக் குழிகளை மனிதப் புதை குழிகளாக அரசு மாற்றி வருகின்றது. வறுமையின் காரணமாக மக்கள் தற்கொலை செய்யுமளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. 

எதிர்வரும் நாட்களில் ஒரு டொலரின் பெறுமதி 130 ரூபா தொடக்கம் 140 ரூபாவிற்கு இடைப்பட்ட தொகை வரை அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும். மக்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசுவதாலோ ஊடகங்களுக்கு தெரிவிப்பதாலோ பலன்கள் ஏற்படப் போவதில்லை. மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளப் போராட வேண்டியுள்ளது. எனவே அரசாங்கம் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். 

இல்லையென்றால் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் ஏனைய எதிர்க் கட்சிகளுடன் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றோம். ஊழல் மோசடிகளினால் அரசின் பங்குதாரர்கள் மாத்திரம் சுகபோகம் அனுபவிக்கின்றனர். சாதாரண பொது மக்கள் பட்டினியால் மரணிக்கின்றனர். 

அதேபோன்று தேசிய இனப்பிரசினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். பாராளுமன்ற தெரிவுக் குழுவின் நிகழ்ச்சி நிரலை தயாரிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீள்குடியேற்றம் முழுமையடைய வேண்டும். இவ்வருட இறுதிக்குள் எஞ்சியுள்ள அனைவரையும் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும். அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு 7500 ரூபாவினால் சம்பளம் அதிகரிக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
__

Aucun commentaire:

Enregistrer un commentaire