mardi 29 mai 2012

சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளது.மஹிந்தவின் ஆட்சி

அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹிந்தவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளது. என தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புலிகள் இருந்த காலக் கட்டத்தை விட தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்கள் தற்போது பன்மடங்கில் அதிகரித்துள்ளன. சர்வதேச தலையீடுகள் மேலோங்க அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையே காரணம். ஐ. நா. வையும் அமெரிக்காவையும் குறை கூறுவதை விடுத்து மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடமையை அரசு பாதுகாக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அமில தேரர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
யுத்தத்தின் பின்னரும் வடக்கு கிழக்கில் தமிழர்களினதோ தெற்கில் சிங்களவர்களினதோ பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு தோல்வி கண்டுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் மேலோங்கி வருவதுடன் சர்வதேச ரீதியிலும் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றது. 

மனித உரிமை பிரச்சினைகள் நாட்டில் தற்போது வெளிப்படையாகவே இடம் பெறுகின்றன. குறிப்பாக நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அனைவராலும் எதிர் பார்க்கப்பட்ட அமைதி சூழல் திரும்பவில்லை. மாறாக கடத்தல், காணாமல் போதல் , தாக்கப்படுதல் என பல்வேறு மனித உரிமை மீறல்களே நாட்டில் இடம் பெற்றன. இதனை காரணம் காட்டி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளன.

முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இக்குற்றச்செயல்கள் குறைவாகவே காணப்பட்டது. தற்போது அது பல மடங்காக அதிகரித்துள்ளது.

அத்துடன், எந்தவொரு நாடுமே செய்யாத விடயமொன்றை வெளிவிவகார அமைச்சு செய்துள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமெழுதி, அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதை திட்ட வரைவு அமைத்து அமெரிக்காவிற்கு கொண்டுச் சென்று காண்பித்தது. உள் நாட்டில் யாருக்குமே மேற்படி செயற்திட்ட வரைபு காண்பிக்கப்படவில்லை.

நம் தாய் நாடு இதை விட கீழ் மட்டத்திற்கு மண்டியிட வேண்டுமா? எனவே தற்போதைய அரசே இவை அனைத்திற்கும் பொறுப்புக் கூற வேண்டும். அது மட்டுமன்றி அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளது என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire