mercredi 6 avril 2016

பீகாரில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது 3 கோடி மது பாட்டில்கள் புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டன

பீகாரில் பூரண மதுவிலக்கு  அமலுக்கு வந்தது. இது தொடர்பாக ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் , பூரண மதுவிலக்கிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் இனி ஹோட்டல்கள், உள்ளிட்ட எந்த இடங்களிலும் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பார் லைசென்ஸ்களும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. பீகார் மாநிலத்தில் சென்ற ஆண்டு
சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது நடந்த பிரச்சாரத்தில் முதல்வர் நிதிஷ்குமார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொள்கையை அமல் படுத்துவோம் என்று கூறினார். அதன்படி தேர்தலில் வெற்றி பெற்ற அவர் படிப்படியாக மதுவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 தேதி முதல் மாநிலத்தில் மது நிறுத்தப்படும் என்று சொல்லியிருந்தார். தற்போது பீகார் மாநிலத்தில் சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இது தொடர்பான சட்டதிருத்தம் சில தினங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட
திருத்த மசோதா குறித்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் குரல் ஓட்டெடுப்பு மூலம் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இன்று முதல் மது குடிக்க மாட்டோம் என்று ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் நீதிஷ்குமார் கூறினார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கைகளை உயர்த்தி ஒருமித்த குரலில், இனி நாங்கள் மது குடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர். பிறகு அது தொடர்பான ஒருதீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.பூரண மது விலக்கை கொண்டு வர கடும் தண்டனை சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி தடையை மீறி மது விற்பனை செய்தாலோ அல்லது சாராயம் காய்ச்சினாலோ பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மது குடித்து தகராறு செய்பவர்களுக்கும் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.பாட்னாவில் சில தினங்களுக்கு முன்னர் ஒரே இடத்தில் 3 கோடி மது பாட்டில்கள் புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டன. மது விலக்கு காரணமாக பீகார் மாநில அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அந்த வருவாய் வேறு வழிகளில் சரி கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மது விலக்கை 100 சதவீதம் அமல்படுத்த போலீசாருக்கு சிறப்பு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன

Aucun commentaire:

Enregistrer un commentaire