vendredi 15 avril 2016

தடைகளைக் கடக்க வேண்டும் இறுதிச்சுற்று! பெண்களுக்கான பெண்ணின் தயாரிப்பு

ஓர் இலட்சியத்தை அடைவதற்குப் பல தடைகளைக் கடக்க வேண்டும். அதுவரை தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் வேண்டும் என்பதே பொக்சிங் எனும் விளையாட்டினூடாக கதாநாயகி மதி (ரித்திகாசிங் ) மூலம் இறுதிச் சுற்று திரைப்படம்  வெளிப்படுத்துவது. ஓர் பெண் எழுத்தாளரின் கதை என்பதால் விளையாட்டுப்  பயிற்சிகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அவ்வப்போது சொல்லத் தவறவில்லை. படுக்கையறைக் காட்சியுடன் படம் தொடங்குவதைப் பார்க்கும்போது பெண்ணின் தயாரிப்பில் உருவான படத்துக்கு இப்படி ஒரு தொடக்கமா என்ற ஓர் கேள்வியே இருந்தது. பெண்களைப் பாலியல் ரீதியாக எந்த இடத்தில் எவ்வாறு பாவிக்கிறார்கள் என்பதற்கு அந்தப்பெண் கதைத்த வசனங்களேதான் சான்று.  அந்தக் காட்சியே தேவையற்றது. அதன்பின்னால் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பெண்ணாலும் பொக்சிங்கில் சாதிக்கமுடியும் என்ற ஓர் கருத்தே படத்தின் பிரதானமாக்கப்பட்டது.

சாராதணமாக ஓர் குடும்பத்தில் பிறந்து மீன் விற்று தனது குடும்பச் செலவைக் கவனிப்பவராக கதாநாயகி மதியைச் சித்தரிப்பதுடன்,  முன்னேற வேண்டும் என்கிற ஓர் உத்வேகம், அக்காவை பொலிஸ் உத்தியோகத்தர் ஆக்க வேண்டும் என்கிற ஆதங்கம் இந்தக் காரணங்களால்  அவர் படத்தில் மீன் விற்ற விதமே அப்படி ஒரு அழகு. அந்த இடத்தில் மதியைக் கண்ட மாதவன் அவளிடம் திறமை இருப்பதை விளங்கி பயிற்சிக்கு வந்தால் பணம் தருவதாக சொல்ல, அதற்கு ஒப்புக்கொண்டு பயிற்சிக்குச் செல்கிறாள். அவ்வப்போது பயிற்சியாளரின் கடுஞ்சொல்லினால் வெளியேற நினைத்தாலும் விளையாட்டின் உண்மையை உணர்ந்தும், அதன்மீதுள்ள விருப்பத்தாலும் தேசிய ரீதியான விளையாட்டுக்குத் தயாராகிப் போட்டிகளுக்குச் சென்ற ஓரிடத்தில் மாதவன் இல்லாது போகவே அங்கு விளையாட்டுத் தலைவர் பாலியல்ரீதியாக அணுக அவனை எதிர்த்தல் பொதுவெளியில் பெண்கள் தங்களை நிரூபிக்க ஒவ்வொரு கட்டத்திலும் இப்படியான பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டியிருப்பது ஓர் பெண் இயக்குரின் அடையாளம்.

அக்கா, தங்கையின் நடிப்பு அற்புதம். விளையாட்டின் முதலிருந்து உலகத்தர வரிசையில் சென்று இறுதிச் சுற்றிலே உலக சம்பியனாகும்வரை ஓர் பெண்ணாக  பல இடர்களை கதாநாயகி கடந்தே செல்ல வேண்டியிருந்தது.  சகோதரியை முன்னேற்ற நினைத்தவர் , பின் இருவரும் சேர்ந்து  சென்ற விளையாட்டுப் பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளர்மீது   காதலால் ஈர்க்கப்பட அங்கே பொறாமையும் இருந்தது என்பது காட்டப்பட்டது . அந்த இடத்தில் அக்கா மறைமுகமான பாலியல் பாவனைக்கும் மன உளைச்சலுக்கும் உட்பட்டார் என்பதை சில காட்சிகள் சொல்லிச் சென்றன. இப்படியான இடங்களில் பெண்கள் நேர்கொள்ளும் பிரச்சனைகள் பட்டும் படாமல்  பேசப்பட்டது. இறுதிச்சுற்றில் தனது தங்கைக்கு வலி என்றதும் ஓடி வந்து உதவுவதும் , விளையாட்டில் வெற்றி பெற்றபின் ஒட்டுமொத்தப் பெண்களுக்கும் கிடைத்த வெற்றிபோல் அனைவரும் எழுந்து நின்று கை தட்டுதலும், பர்தா அணிந்த பெண்கள் அதை விலக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துதலும் பெண் படைப்பின் உச்சம்.

உலகத்தர வரிசையில் இறுதிச் சுற்றில் வென்றபின் தன் வெற்றிக்கு காரணமானவரை ஓடிச்சென்று கட்டித்தழுவிய விதம் பார்ப்போரின் கண்களை கவர்ந்தது. காதலில் வெற்றி பெற்றாலும், விளையாட்டில் வெற்றிபெற்றாலும் இவ்வாறு தழுவுதல் படங்களிலும் சில விளையாட்டு நிகழ்வுகளிலும் காட்டப்படும். இதில் எது என்பதும் அல்லது இரண்டாகவும் எடுப்பது என்பதும் அவரரின் முடிவு போல் முடிவுற்றது படம். மொத்தத்தில் பெண்களுக்கான பெண்படைப்பின்  இயக்குனரான சுதா கொங்கராவின் வெற்றி  பெற்ற திரைப்படம் எனலாம். விமர்சனம் என்பது ஒவ்வொருவரது பார்வையில் அவரவருக்கானது.

நன்றி  மது 

Aucun commentaire:

Enregistrer un commentaire