mardi 5 avril 2016

500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய சிறுகதை முன்னோடி சேது அம்மாள்

சேது அம்மாள்
தமிழில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் கு.ப. சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மையானவர் கு.ப.ரா. எனப்பட்ட கு.ப. ராஜகோபாலன். அவருடைய தங்கைதான் சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை உலகில் காலடி எடுத்து வைத்த பெண் எழுத்தாளர்களுக்கு அவர் முன்னோடி.

அண்ணன் காட்டிய உலகம்

மிகக் குறைந்த காலமே வாழ்ந்த கு.ப.ராஜகோபாலனுக்குக் கண்புரை பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அவருக்குக் கைகொடுத்து, அவர் சொல்லச் சொல்ல எழுதித் தந்தவர் சேது அம்மாள். வெறும் எழுத்தராக மட்டும் தங்கை சேது அம்மாளை கு.ப.ரா. நிறுத்திவிடவில்லை. தங்கையின் அறிவு தாகத்தையும் இலக்கிய ஆவலையும் தூண்டிவிட்டார்; படிக்க வலியுறுத்தினார். சேது அம்மாள் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தார்.

இப்படி அண்ணனுடைய கற்பனைகளுக்கு எழுத்துருவம் கொடுத்துவந்த அவர், தானும் இலக்கிய உலகில் புகுந்தார். தனியாகச் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். அவரது முதல் சிறுகதையான ‘செவ்வாய் தோஷம்’, 1935-ம் ஆண்டில் ‘காந்தி’ என்ற இதழில் வெளியானது.

சிறுகதை சாதனை

தொடர்ந்து மணிக்கொடி, பாரதி, கல்கி, குமுதம், ஆனந்த விகடன் உள்ளிட்ட பிரபல இதழ்களில் சேது அம்மாள் சிறுகதைகளை எழுதினார். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி உதயம்’, 13 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. அது கு.ப. ராஜகோபாலனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

அதன் பிறகு ‘தெய்வத்தின் பரிசு’, ‘வீர வனிதை’, ‘உயிரின் அழைப்பு’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை சேது அம்மாள் வெளியிட்டிருக்கிறார். 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ‘1940-களிலேயே சிறுகதையின் வடிவம், நுணுக்கங்கள் சார்ந்த நல்ல புரிதலைக் கொண்டிருந்த எழுத்தாளர்’ என்று சேது அம்மாளை விமர்சகர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

இலக்கிய உலகின் வேறு பல வடிவங்களிலும் சேது அம்மாள் எழுதியிருக்கிறார் என்ற போதிலும், ஆரம்பகாலச் சிறுகதை வடிவத்தில் அவருடைய முயற்சிகளும், ஆரம்பகாலப் பெண் எழுத்தாளராக அவருடைய பங்கும் மிக முக்கியமானவை.

Aucun commentaire:

Enregistrer un commentaire