mercredi 11 mai 2016

200 கோடி ரூபாய் முதலீட்டில் வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம்!

வவுனியா மாவட்டம் 200 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கான காணியை இந்த வார இறுதிக்குள் இனங்கண்டு தருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கான காணியைத் தெரிவு செய்வதில் இழுபறி நிலை நீடிப்பதாகவும், இந்த விடயம் தொடர்பில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சருடன் தான் கலந்துரையாடலொன்றை நடத்தியதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இதன்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “எனது வடக்கு மாகாண விஜயத்தின் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்துள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். தென்னிலங்கையில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தொகையான பொருளாதார மையங்களுக்கு சமமாக ஒரு பொருளாதார மையத்தை வடக்கு மாகாணத்தில் அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார மையம் அமைக்கப்படுமானால், யாழ், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட விவசாயிகள், கமக்காரர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கும். இது வடக்கு மாகாணத்துக்கு வழங்கப்படும் பெரும் வரப்பிரசாதம் ஆகும்.
ஆனால், இந்த இடம் அமைக்கப்படுவதற்கு பொருத்தமான இடத்தை வழங்குவதில் வடக்கு மாகாண சபைக்கும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையில் இழுபறி இருந்தது. இதுபற்றி எனது வடக்கு மாகாண விஜயத்தின் போது வவுனியா வாழ் மக்கள் பிரதிநிதிகள் எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். உடனடியாக இதுபற்றி நான் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிசனுடன் உரையாடினேன்.
இதையடுத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்தேன். உரிய காலத்துக்குள் இந்த இடம் வழங்கப்படாவிட்டால், குறிப்பிட்ட 200 கோடி ரூபாய் தொகை வேறு தென்னிலங்கை மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படலாம் என்ற அபாயம் பற்றியும் நாம் இருவரும் கலந்து பேசினோம்.
இந்நிலையில் இதை தீர்த்து பொருத்தமான ஒரு இடத்தை வவுனியா நகருக்கு அண்மித்த ஒரு இடத்தில் தெரிவு செய்து வழங்க சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இன்னமும் இரண்டொரு தினங்களில் இந்த இடத்தை அறிவிப்பதாகவும் அவர் என்னிடம் கூறியுள்ளார்.” என்றுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire