mercredi 18 mai 2016

போர் வெற்றிவிழா கொண்டாட முடியாது விடுதலைப்புலிகள் ஆயுத இயக்கமாக இருந்தாலும் கூட அவர்களும் இலங்கையர்கள்:ஹெற்றியாராச்சி


போரில், எமது சகோதர இனத்தவரான தமிழர்களை கொன்று விட்டு நாம் போர் வெற்றிவிழா கொண்டாட முடியாது என இலங்கை பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட அவர்,

“வடக்கில் விடுதலைப்புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என பரப்புரை செய்யப்பட்டாலும் அதில் எந்த உண்மைகளும் இல்லை. போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரவே அவர்கள் ஒன்றுகூடுவதாக கூறியுள்ளனர். எந்த சந்தர்ப்பத்திலும் புலிகளை நினைவேந்தும் நடவடிக்கையாக அமையாது என குறிப்பிட்டுள்ளனர்.

போரில் உயிரிழந்த மக்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவுகூர அவர்களுக்கு உரிமை உண்டு. அதை நாம் தடுக்கமாட்டோம். அவர்கள் விரும்பிய இடங்களில் அவர்களை நினைவுகூர முடியும்.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நாளை போர் வெற்றிநாளாக கொண்டாட வேண்டும் என ஒருசிலர் கூறுகின்றனர். அவ்வாறு கொண்டாட நாம் தயாராக இல்லை.

இரு நாடுகளுக்கு இடையிலான போராக இருந்தால் நாம் வெற்றிபெற்றதை கொண்டாட முடியும். ஆனால் இது ஒரு நாட்டினுள் சகோதர இனங்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல். இதில் எமது சகோதர உறவுகள் தான் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் ஆயுத இயக்கமாக இருந்தாலும் கூட அவர்களும் இலங்கையர்கள். அவர்களும் ஏதோ ஒரு உரிமைக்கான போராட்டமாகவே இதை முன்னெடுத்தனர்.

ஜேவிபியினர் 1971 மற்றும் 1989இல் வன்முறை போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இன்று அவர்கள் ஏனைய கட்சிகளை விடவும் வித்தியாசமான ஜனநாயக வாதிகளாக தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர்.

அதேபோலவே விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன.

எனினும் இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுள்ளது. எமது சகோதரர்களை கொன்றுவிட்டு நாம் வெற்றிவிழா கொண்டாட தயாராக இல்லை.இலங்கையர் என்ற வகையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

வடக்கில் மக்கள் மத்தியில் நல்ல ஜனநாயக மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு ஏற்பட்டுள்ளது.அவ்வாறு இருக்கையில் மீண்டும் தமிழர்களை பிரிவினைவாதிகளாக்கி அவர்களை ஓரம்கட்டும் செயற்பாடுகளை கைவிட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire