dimanche 8 mai 2016

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவருக்கும் பிரஜாவுரிமை


ranil_thinஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் உட்பட ஏனைய நாடுகளில் வாழ்கின்ற இலங்கையர் அனைவருக்கும் இலங்கைப் பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், இவ்வாறானவர்கள் தாம் வாழும் நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றிருந்தாலும் அவர்கள் விரும்பினால் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கவும் நாம் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பிரதமரிடம் கேள்வி கேட்கும் நேரத்தின் போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ( ஈ.பி.டி.பி.) யாழ்.மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவிப்பை சபையில் விடுத்தார்.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதில் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், அங்குள்ள பலர் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாதிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா, இது தொடர்பில் பிரதமர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்னவெனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில் ; 1983 ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட கலவரங்கள், யுத்த சூழலால் இலங்கையிலிருந்து வெளியேறி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் எமது பிரஜைகளை இலங்கைக்கு மீண்டும் அழைப்பதே அரசின் கொள்கை. இந்தியாவில் அகதிகளாகவுள்ள பலர் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாதுள்ளனர்.
இவர்களுக்கு இலங்கைப் பிரஜா உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று வேறு நாடுகளிலும் பலர் இலங்கை பிரஜாவுரிமை இல்லாதுள்ளனர். இவர்களுக்கும் இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்படும். அத்துடன், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பலர் அந்நாடுகளின் பிரஜாவுரிமைகளைப் பெற்றுள்ளனர்.
இவர்கள் இலங்கை பிரஜாவு>ரிமையை பெற விரும்பினால் இவர்களுக்கு அதாவது சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைவருக்கும் இரட்டை பிரஜாவுரிமை வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம்.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எதிர்நோக்கும் சட்டச் சிக்கல்கள் தொடர்பில் சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை அறிவுறுத்தியுள்ளோம். இந்தியாவிலிருந்து இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக 2 முதல் 4 வாரங்களுக்குள் கடவுச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு நான் பணிப்புரை விடுக்கிறேன்.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளில் 22 வயதுக்கு மேற்பட்டடோரே ஆட்பதிவு செய்யப்பட்டனர். இனி இவ்வயதுக்கு குறைவானவர்களையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலுள்ள இலங்கை அகதி சிறுவர்கள் பலர் பதிவுச் சான்றிதழ் பெற முடியாத நிலையில் உள்ளனர். இவர்களை பதிவு செய்யவும் நான் நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு சான்றிதழ்களைப் பெற முடியாதவர்கள் இருப்பின் அவர்கள் தொடர்பான விபரங்களை பெற்றுத்தந்தால் அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’.
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் அகதிகளாகவும் தொழில்களுக்காகவும் வாழும் இலங்கையர்கள் அனைவருக்கும் பிரஜாவுரிமையும் இரட்டைப் பிரஜாவுரிமையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பா.கிருபாகரன், டிட்டோகுகன்

Aucun commentaire:

Enregistrer un commentaire