dimanche 25 novembre 2012

109 பெண்களில் 6 பேர் சுயவிருப்பின் பேரில் விலகினர்'


இலங்கையில் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 பெண்களில் 6 பேர் சுயவிருப்பின் பேரில் விலகிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் இருந்து தமிழ் பெண்கள் தப்பி ஓடியதாக முன்னர் வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார்.
அதேவேளை, அந்தப் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், அடைத்து வைக்கப்பட்டதாகவும் வந்த செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.
முன்னதாக, இராணுவத்துக்கு சேர்க்கப்பட்ட 109 தமிழ் பெண்களில் 3 பேர் தாம் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக கூறி, அதில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியிருந்தார்.
அலுவலகப் பணிகளுக்காக, கணினி பயிற்சிகளுக்காக என்று பொய்யாக கூறி சேர்க்கப்பட்ட தாம் இராணுவ பணிகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்று தெரிய வந்ததுடன் இராணுவத்தில் இருந்து விலக அந்தப் பெண்கள் கோரியதாகவும், ஆயினும் ஒரு நாள் வரை தடுத்து வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் சிறிதரன் எம்பி கூறியுள்ளார்.
முற்றிலும் இராணுவத்தினாலும், அதன் உளவுப் பிரிவினாலும் சூழப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து மன்னார், துணுக்காய் பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண்கள் தப்பி ஓடியதாக வெளிவந்த செய்திகள் தவறு என்றும் சிறிதரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தான் உரிய இடங்களில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் சிறிதரன் தமிழோசைக்கு தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire