samedi 17 novembre 2012

தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு இராணுவத்தில்



இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக 109 தமிழ் இளம் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த வைபவம் கிளிநொச்சி பாரதிபுரத்தில் கோலாகல வைபவமாக சனிக்கிழமை நடைபெற்றிருக்கின்றது.
பதினெட்டுக்கும் இருபத்திரண்டுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

சிவில் வேலைக்காகவே தம்மை சேர்த்துள்ளதாகவும், தங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்ததாகவும் இராணுவத்தில் இணைந்துள்ள பெண்கள் தெரிவித்தனர்.

சிங்கள மொழிப் பயிற்சி உட்பட மூன்று மாதப் பயிற்சியின் பின்னர் தமது கிராமத்திலேயே தொழில் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

குடும்ப வறுமை, தொழிலின்மை என்பன காரணமாகவும், 30 ஆயிரம் ரூபா மாதாந்த சம்பளம், மற்றும் வசதிகள் தரப்படும் என கூறியிருப்பதனால் தாங்கள் இதில் சேர்வதற்கு முன்வந்துள்ள போதிலும், இராணுவப் பயிற்சியென்றால் தங்களுக்கு விருதுப்பமில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் இளம் பெண்கள் வேலை வாய்ப்புக்காக இராணுவத்தில், அதுவும் தேசிய இராணுவத்தில் இணைவதை ஒரு சாதகமான நிலையாகவே தான் நோக்குவதாக, தெரிவித்த பாரதிபுரம் அருட் தந்தை டிக்ஷன், கடந்த காலங்களில் இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு நிலைமைகளில் தமது பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோர் இந்தச் சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளைப் பிரிந்த போது கண்ணீர் விட்டு அழுததை கண்டதாகக் கூறினார்.

முதல் தடவையாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைவதற்கு முன்வந்தமையானது, அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கையின் முன்னேற்றத்தைக் காட்டுகின்றது என்று இந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.
அதேவேளை தமிழர்களுக்கான ஏனைய விடயங்கள் எதுவும் இதுவரை சரியாக பூர்த்தியாகாத நிலையில், இராணுவத்துக்கு மாத்திரம் பெண்கள் சேர்க்கப்படுவதை சில தமிழ் பெண்கள் அமைப்புக்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றன.
அதுவும் குறிப்பாக கடந்த காலங்களில் பெண் போராளிகள் விடயத்தில் இராணுவம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறும் அவர்கள், அப்படியான இராணுவத்தில் சரியான மாற்றங்கள் எதுவும் வராமல், அதற்கு முன்னதாகவே பெண்கள் சேர்க்கப்படுவது குறித்து கரிசனையும் தெரிவித்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire