பாலஸ்தீன எல்லையில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார். பாலஸ்தீன நாட்டின் காஸா பகுதிக்குள் மறைத்துக்கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்த ஹமாஸ் போராளிகளை அடக்க இஸ்ரேல் முடிவு செய்தது.
கடந்த 7 நாட்களாக காஸா நகரில் உள்ள ஹமாஸ் போராளிகளின் பதுங்குமிடங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர எகிப்து நாடு முயற்சித்து வருகின்றது.
ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன்று எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றுள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகள் இடையே நடைபெறும் தாக்குதல்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எகிப்து வெளியுறவு துறை மந்திரியுடன் பான் கீ மூன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி சமரசத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவெடுத்துள்ளார். தற்போது கம்போடியா தலைநகர் பினோம் பென்னில் நடைபெற்று வரும் ஆசியான்-10 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா பங்கேற்று வருகிறார். அவருடன் ஹிலாரி கிளிண்டனும் சென்றுள்ளார். இருவரும் இன்று இரவு அமெரிக்காவுக்கு திரும்புகின்றனர்.
அதன் பின்னர் ஹிலாரி கிளிண்டனை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒபாமா அனுப்பி வைப்பார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹிலாரி கிளிண்டன், இந்த பயணத்தின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹுவை இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் சந்திக்கிறார். பின்னர் ரமல்லாவில் பாலஸ்தீன அதிகாரிகளையும் சந்திக்கும் அவர், இறுதியாக போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டுள்ள எகிப்து நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என தெரிகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire