mardi 6 novembre 2012

ஜனாதிபதிக்கே உண்டு -மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப் படுத்துவதை தீர்மானிக்கும் அதிகாரம் - ஹக்கீம்


இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப் படுத்துவதா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டென தெரிவித்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், மரண தண்ட னையை சிறைத்தண்ட னையாக மாற்றுவது பற்றி ஆராய்வதற்கான ஒரு குழு மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நியமிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னார்ட் சவேஜ்  அமைச்சர் ஹக்கீமை  திங்கட்கிழமை (05) காலையில் சந்தித்துப் பேசினார்.

இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது 1976 ஆம் ஆண்டில், மாலைதீவில் 1953 ஆம் ஆண்டிலும் இருந்து கைவிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், மீண்டும் இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதா, இல்லையா என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளும் விதத்தில் அமைச்சரிடம் வினவினார்.

மிக விரைவில் நியமிக்கவுள்ள மேல் நீதிமன்ற நீதிபதியொருவரின் தலைமையிலான இக்குழுவில் சட்டமா அதிபர் திணைக்களம், நீதியமைச்சு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் சிலர் உட்பட உளவியல் நிபுணர் ஒருவரும் இடம்பெறுவார்.

இக்குழு கூடி ஆராய்ந்து விதந்துரைக்கும் விடயங்களைப் பொறுத்து மரண தண்டனையை சிறைத்தண்டனையாக மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ரிஸானா நபீக் பற்றியும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்து சட்ட முறைமை மற்றும் நீதிச் சீர்திருத்தங்கள் பற்றி கண்டறிவதற்கான வாய்ப்பை தமது தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவிற்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஏற்படுத்தித் தருமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை தூதுவர் பேர்னார்ட் சவேஜ் ஏற்றுக்கெண்டதோடு, அது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இலங்கையில் தூக்குத் தண்டனை இறுதியாக 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. 2002 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டு அத்தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரையில் பெண்கள் மூவர் மற்றும் ஆண்கள் 377 பேர் உட்பட மொத்தம் 380 நபர்கள் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Aucun commentaire:

Enregistrer un commentaire