எமது நாட்டின் இனப்பிரச்சினை தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கலின் ஆரம்ப படியாக இருக்கின்ற மாகாண சபை முறைமையையும் அதற்கான 13 ஆவது அரசியல் திருத்த அதிகாரங்களையும் பலவீனப்படுத்துகின்ற அல்லது இல்லாமல் செய்கின்ற சட்ட ரீதியான அல்லது வேறு வகையிலான எந்த முன்னெடுப்புக்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஏற்றுக்கொள்ளாது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசுவாமி நந்தகோபன்(ரகு) அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவையொட்டி மட்டக்களப்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் கட்சித் தலைவர் கௌரவ.சி.சந்திரகாந்தன் அவர்களது தலைமையில் நடைபெற்ற கட்சித் தொண்டர்களுடனான முக்கிய கூட்டத்தில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையில் நீண்ட காலமாக புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்வுக்கான ஆரம்ப படிநிலையாக மாகாண சபை முறைமையும் 13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. மாகாணங்களினூடான அதிகாரப் பரவலாக்கல் மூலம் அதிகாரத்தின் தேவையுணர்ந்த அனைத்து தரப்பு மக்களினதும் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதனுடன் இதனூடாக முழுமைப்படுத்தப்பட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வினை எய்த முடியும் எனவும் கட்சி உறுதியாக நம்புகின்றது.
சம காலத்தில் 13 ஆவது அரசியல் அதிகாரம் தேவையா? இல்லையா? என்கின்ற விவாதம் எழுந்துள்ளமை மிகவும் கவலைக்குரியதாகவும் துரதிஷ்டவசமானதுமாகும். எமது நாடு இனவாதங்களிலிருந்து மீண்டு சுபீட்சமான இயல்பு வாழ்க்கையை நோக்கி முன்னேறுகின்ற தருணத்தில் தமிழ் பேசும் மக்கள் அச்சப்படுகின்ற இவ்வாறான தோற்றப்பாடுகளை உருவாக்குவதை பொறுப்பு மிக்க தலைவர்களும் அரசியல் கட்சிகளும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
மாகாண சபை முறைமையோ அல்லது 13 ஆவது அரசியல் அதிகாரங்களையோ பலவீனப்படுத்துகின்ற அல்லது இல்லாமல் செய்கின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கெதிராக அதிகாரப்பகிர்வில் நம்பிக்கை கொண்ட தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் இணைந்து ஜனநாயக ரீதியலான வெகுஜன போராட்டங்களை நடாத்தவும் த.ம.வி.பு.கட்சி பின் நிற்கப் போவதில்லை.
கொடிய யுத்தம், இனரீதியான முரண்பாடுகள் போன்ற கரும் பக்கங்களிலிருந்து நாடு மீண்டு வருகின்ற வேளைகளில் இனங்களுக்கிடையே நல்லுறவையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப அனைத்து கட்சிகளும் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும் எனவும் த.ம.வி.பு.கட்சி அழைப்பு விடுகின்றது.
பூ.பிரசாந்தன்,
பொதுச்செயலாளர்,
த.ம.வி.பு.கட்சி.
பொதுச்செயலாளர்,
த.ம.வி.பு.கட்சி.
Aucun commentaire:
Enregistrer un commentaire