dimanche 25 novembre 2012

பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கருணா!

அன்று 13வது திருத்தச் சட்டத்தை தூக்கியெறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று 13வது திருத்தம் பற்றி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசுவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 

நிதி அமைச்சுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து இன்று (24) பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி அவர் மேலும் கூறியதாவது, 

வடக்கு கிழக்கில் இன்று பாரிய அபிவிருத்தி நடைபெறுகிறது. உங்களை விட வடக்கு கிழக்கு பகுதிக்கு அதிகம் விஜயம் செய்தவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்கிறார். நீங்கள் கொழும்பில் இருப்பதால் அங்கு நடப்பது ஒன்றும் தெரியாது. 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பற்றி பேசுகிறீர்கள். அதனை கொண்டுவந்தது ஐக்கிய தேசியக் கட்சி எனவே அது பற்றி அக்கட்சியிடம் கேளுங்கள். உங்களுக்கு வரலாறு தெரியாது. 

1987ல் 13வது திருத்தத்தை தூக்கி வீசிய நீங்கள் இன்று உள்நாட்டில், வெளிநாட்டில் புலம்பெயர் தமிழர்களிடம் 13வது திருத்தம் பற்றி பேசுகிறீர்கள். 

நீங்கள் புலம்பெயர் தமிழர்களுக்காக அவர்களின் பணத்திற்காக அரசியல் செய்கிறீர்கள். புலம்பெயர் தமிழர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்ல வேண்டாம். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலம்பெயர் தமிழர்களை ஒருபோதும் வெறுக்கவில்லை. அவர் எப்போதும் அவர்களுக்கு இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கிறார். 

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவே பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீது விருப்பம் கொண்டவர்கள் என்றால் அதில் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினை பற்றி பேசுங்கள். 

இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என பல இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி மீண்டும் நாட்டில் யுத்தம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். 

இவ்வாறு விநாயகமூர்த்தி முரளிதரன் பாராளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தாக்கிப் பேசினார். இவர் பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை வசனத்திற்கு வசனம் ஆளும் தரப்பு எம்பிக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து அவரை உட்சாகப்படுத்தினர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire