தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு எனப்படும் 'டெசோ’ அமைப்பை தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் உருவாக்கினார். அது தொடர்பாக சென்னையில் ஒரு மாநாட்டையும் நடத்தினார். இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, இந்தத் தீர்மானத்தின் நகலை தி.மு.க. எம்.பி-க்கள் அனைவரும் ஒருசேரப் போய்க் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 'ஐக்கிய நாடுகள் அவையிலும் இந்தத் தீர்மானத்தைக் கொடுப்போம்’ என்றும் கருணாநிதி அறிவித்தார். இதற்காக ஸ்டாலினையும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவையும் அமெரிக்கா அனுப்பி வைக்கவும் கருணாநிதி திட்டமிட்டார்.
நவம்பர் 1-ம் தேதி இவர்கள் இருவரும் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டனர். அதேசமயம் அமெரிக்கா, சாண்டி புயலில் சிக்கி இருந்தது. 'இந்தச் சூழ்நிலையில் நியூயோர்க் செல்வது சரியாக இருக்குமா?’ என்று கருணாநிதி யோசனை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே மாநாடு முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இனியும் தாமதிக்க வேண்டாம்’ என்று சொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்டாலினும் பாலுவும் அமெரிக்காவுக்குக் கிளம்பினர்.
இருவரும் நியூயோர்க் போய் இறங்கியபோது அந்த நகரமே வெள்ளக்காடாக இருந்தது. சென்னையைப் போலவே மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பல இடங்கள் இருளில் மூழ்கி இருந்தன. இவர்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்கே மிகுந்த சிரமத்துக்கு இடையேதான் போக முடிந்ததாம். அந்த அளவுக்கு போக்குவரத்து முடங்கிப்போனது. புயலின் சீற்றத் தால், ஐ.நா. சபை வளாகத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூன், 20 நாட்கள் பயணமாக ஆபிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளுக்குச் சென்றுள்ளதால், அவரை இவர்களால் சந்திக்க முடியவில்லை. அவருக்குப் பதிலாக ஐ.நா. சபையின் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் இவர்களை வரவேற்றுள்ளார்.
ஸ்டாலினைப் பார்த்ததும் யான் லியாசன், ''அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் சீற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் நீங்கள் வந்துள்ளீர்கள். இதிலிருந்தே உங்களுக்கு இலங்கைத் தமிழர் மீது உள்ள அக்கறை புரிகிறது'' என்று சொன்னாராம்.
''எங்களுக்கோ ஒரு நாள்தான் கஷ்டம். ஆனால், ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகாலத் துன்பத்துக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்றுதான் உங்களைப் பார்க்க வந்தோம்'' என்று கூறினாராம் ஸ்டாலின்.
''இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஐ.நா. சபை என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று யான் லியாசன், கேட்டுள்ளார்.
''இலங்கையில் போரால் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும்,
"நிம்மதியான வாழ்க்கை அமைய மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும்.
"தமிழர் பகுதிகளில் உள்ள இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
"ஈழத் தமிழர்கள் விரும்புகிறபடி அரசியல் தீர்வு காண வேண்டும். அதற்காக உலக அளவில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
"போரால் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மேலும் துன்பப்படுகிறார்கள். அவர்களை இலங்கை இராணுவம் தவறான முறையில் நடத்துகிறது. எல்லாவற்றுக்கும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும்''
என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் சில விஷயங்களை ஸ்டாலின் சொல்லிச் செல்ல, ''இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் இலங்கைப் பிரச்சினையில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்?'' என்று, லியாசன் கேட்டுள்ளார்.
''ஈழத் தமிழர்களின் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்துத் தலைவர்களும் உறுதியாக இருக்கின்றனர். ஐ.நா. சபையால் மட்டுமே இதற்குச் சரியான தீர்வு காண முடியும் என்று நினைக்கிறோம்'' என்றாராம் ஸ்டாலின்.
அதோடு,டெசோ தீர்மானங்கள் நவநீதம்பிள்ளையிடம் கையளிப்பு! கருணாநிதி கையெழுத்திட்டு அளித்துள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளருடன் விவாதித்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire