கொழும்பு கடற்கரையோரங்களில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகள் தொடக்கம், போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்படும் புதிய உந்துருளிகள்
மற்றும் செல்லிடத் தொலைபேசிகள் வரையான பல்வேறு புதிய உற்பத்திப் பொருள்களின் பயன்பாடு, இலங்கை அறிவித்தது போன்று ஆசியாவின் தற்போதைய முன்னணிச் சந்தையாக கொழும்பு மாறிவருவதைக் காண்பிக்கின்றது.
ஆனால் இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் கூட இங்கே தனியார் முதலீடுகள் போதியளவில் மேற்கொள்ளப்படவில்லை. பொருளாதாரத் துறையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கைக்கொண்டு வரும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையில் தனியார் முதலீடு என்பது போதியளவில் காணப்படவில்லை.
2009இல் போர் முடிவடைந்ததிலிருந்து இலங்கையின் வெளிநாட்டுச்சந்தை முதலீடானது 17வீதம் வளர்ச்சியடைந்துள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்தளவு வளர்ச்சியை எட்டவில்லை. கடந்த ஆண்டில் இலங்கைக்குக் கிடைத்த நேரடி வெளிநாட்டு முதலீடானது ஒரு பில்லியன் டொலர் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள போதிலும், இது அவ்வளவு போதுமானதல்ல என்பதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கைக்குக் கிடைத்த நேரடி வெளிநாட்டு முதலீடானது 300 மில்லியன் டொலர் எனவும் 2005 இல் இருந்து மேற்கொள்ளப்பட்ட நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடானது மிகக் குறைவானது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விவரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது இலங்கை அரசின் உத்தியோகபூர்வப் புள்ளிவிவரம் தொடர்பான நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் இடையில் உண்மையான மீள் இணக்கப்பாட்டைக் கொண்டு வருவதில் இலங்கை ஜனாதிபதி பின்னிற்பதே பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களில் பிரதானமானது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முக்கிய அமைச்சுப் பதவிகளையும், திணைக்களங்களையும் ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன் வரவுசெலவுத் திட்டத்தில் நிதி மற்றும் பாதுகாப்பு உள்ளடங்கலாக 70 வீதம் ராஜபக்ஷ சகோதரர்களால் ஆளப்படும் அமைச்சுக்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.
இலங்கை ஜனாதிபதியின் மூத்த மகன் தேர்தல் மூலம் மக்களால் தெரிவுசெய் யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதுடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைக் கொண் டுள்ள தற்போதைய நாடாளுமன்றின் சபாநாயகராகவும் ஜனாதிபதியின் மூத்த சகோதரன் பதவி வகிக்கிறார்.
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்களானது மிகச் சிலரின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது' என இலங்கையின் பிரதான அரசியற்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார விவகார பேச்சாளர் ஹர்சா டீ சில்வா தெரிவித்துள்ளார்.
போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளான போதிலும், சில பெரிய விடுதிகள் தவிர வேறெந்தப் பயனுள்ள முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை' என ஹர்சா டீ சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா தொடக்கம் இந்தியா வரை ஒவ்வொரு நாட்டிலும் குடும்ப அரசியல் காணப்படுகிறது.
இதே போன்று நானும் எனது உறவினர்களும் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றோம்.இது குடும்ப அரசியலாகக் காணப்படுகின்ற போதிலும், மக்கள் எங்களை விரும்பியே தேர்வு செய்துள்ளனர்' என ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேர்காணல் ஒன்றில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றைய நாடுகளில் ஆட்சியிலுள்ளவர்கள் தாமாகவே தீர்மானத்தை எடுத்து அதனை நடைமுறைப்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் உடனடியாக வெற்றியைப் பெறுகின்றனர். ஆனால் எமது நாட்டைப் பொறுத்தளவில் தீர்மானங்கள் எடுப்பதானது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தீர்மானம் இயற்றுவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன' எனவும் பஸில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வர்த்தகத் துறையில் இலங்கை ஜனாதிபதியும் அவரது குடும்பத்தவர்களும் அதிக செல்வாக்கையும் அதிகாரத்தையும் கொண்டிருப்பதால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
'வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட அமைச்சுக்களில் பெரும்பாலானவற்றை ராஜபக்ஷ குடும்பத்தவர்கள் கட்டுப்படுத்துகின்றனர். இதுவே நாம் தற்போதுஎதிர்நோக்கும் பிரச்சினையாகும்' என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டுள்ளார்.
கடன் வழங்குநர்கள் மற்றும் தனது நட்பு நாடான சீனா போன்றவற்றிடமிருந்து பெருமளவான கடன்களை இலங்கை ஜனாதிபதி பெற்றுக் கொள்கிறார். இதுவே தற்போதைய நேரடி வெளிநாட்டு முதலீடாகக் காணப்படுகிறது. ஆனால் இது நீண்டகால அடிப்படையில் நிலைத்து நிற்கக்கூடிய பொருளாதார வளர்ச்சியல்ல எனப் பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மந்தம், மந்தம்
ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் துரித கட்டுமான அபிவிருத்தியானது, ஏனைய போரின் பின் மீண்டெழும் நாடுகளை விட இலங்கை அபிவிருத்தியடைவதைக் காண்பிக்கின்ற போதிலும், உள்நாட்டில் இதன் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மந்தகதியிலேயே உள்ளன.
தனியார் மற்றும் பொதுத்துறைகளின் நடவடிக்கைகளில் இலங்கை அரசானது குழப்பத்தை விளைவித்து நாட்டில் முதலாளித்துவத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதையே தற்போதைய அறிகுறிகள் காண்பிப்பதாக Pathfinder Foundation என்ற பொருளியல் ஆய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார நடவடிக்கையில் இராணுவத்தின் தலையீடு மற்றும் தனியார், பொதுத்துறையினரின் பங்களிப்பு தொடர்பில் தெளிவான வரையறை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது' என லக்ஸ்மன் சிறிவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் வாழும் இலங்கையில் வடக்கிலுள்ள யாழ்ப்பாணமானது இரண்டாவது பெரிய நகரமாகவும், பொருளாதார மையமாகவும் காணப்பட்டது. 1983இல் ஆரம்பமான ஆயுதப் போராட்டத்தை அடுத்து யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
இலங்கையில் நீண்டகாலம் தொடர்ந்த போரின் இறுதிக் கட்டத்தில் 40,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிவித்துள்ளதும் தெரிந்ததே. இலங்கையின் வடக்கில் வாழ்ந்த மக்கள் தென்பகுதிக்கு பிரயாணம் செய்வதற்கு இலங்கை இராணுவத்தினரின் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது.
தற்போது மெதுமெதுவாக யாழ்ப்பாணம் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. தற்போது தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பஸ்கள் பயணிக்கின்றன.அத்துடன் விமானம் மூலமும் பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்கின்றனர். போரால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பெருமளவான காணிகளை இலங்கை இராணுவம் சுவீகரித்துள்ளதாக இங்கு வாழும் மக்கள் முறையிட்டுள்ளனர்.
இங்கு நடைபெறும் உள்ளூர் தேர்தல்கள் மற்றும் ஏனைய நாளாந்த நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையீடு செய்வதானது மீண்டும் இனக்குழப்பத்தை ஏற்படுத்தக் காலாக உள்ளதாகவும் உள்ளுரில் வாழும் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதில் தயக்கம் காண்பிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதலில் சேதமாக்கப்பட்ட தனது பெற்றோரின் வீட்டைத் திருத்தி அதில் வர்த்த நடவடிக்கையை ஆரம்பிக்கும் நோக்குடன் போரின் இறுதியில் இளம் தமிழ் வர்த்தகரான வி.கந்தப்பா பிரிட்டனிலிருந்து இலங்கைக்குத் திரும்பி வந்திருந்தார்.
நிச்சயமற்ற நிலையில் தனியார் துறையினர்
இனிவருங் காலங்களில் என்ன நடக்கப் போகின்றது என்பது தொடர்பில் தனியார் துறையினர் நிச்சயமற்றுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமது முதலீடுகளை மேற்கொள்வதில் மக்கள் அச்சங்கொள்கின்றனர் என கந்தப்பா தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தவர்கள் விடுதிகள் மற்றும் விமான நிலையங்கள் போன்றவற்றை நடத்துவதானது கொழும்பில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 43 மாடிகளைக் கொண்ட Hyatt Regency என்ற விடுதி பகுதியளவில் இலங்கை அரச காப்புறுதி நிறுவனத்தால் ஆளப்பட்டாலும் இதனை இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் காமினி செனரத்தே நடத்தி வருகிறார்.
இந்தவிடுதி கட்டப்பட்டுள்ள நிலம் கடந்தஆண்டு பஸில் ராஜபக்ஷ அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக்காணி பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நகரஅபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானதாகும். நகர அபிவிருத்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலராக இலங்கை ஜனாதிபதியின் பிறிதொரு சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷ பணிபுரிகிறார். இலங்கை இராணுவத்தைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரமும் பாதுகாப்பு அமைச்சுக்கே உள்ளது.
ஜனாதிபதியின் பெயரைக் கொண்டுள்ள மிகின் லங்கா மற்றும் Helitours போன்ற விமான சேவைகளையும் இலங்கை அரசு நடத்துகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் விமானப் படைத் தளபதி ஆகிய இருவரும் இணைந்து மிகின் லங்கா சேவையை ஆரம்பிப்பதென திட்டமிட்டனர்.
இதே போன்று சிறிலங்கன் எயார்லைன்ஸ் அரசுக்குச் சொந்தமானதாகும். தற்போது இதனை ராஜபக்ஷவின் மைத்துனர் நடத்தி வருகிறார். எரிபொருள் விலையேற்றம் மற்றும் போக்குவரத்துக் கட்டணம் குறைத்து அறவிடப்பட்டமை போன்ற காரணங்களால் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை கடந்த ஆண்டில் 14 மில்லியன் டொலர்களை இழந்ததாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்ததிலிருந்து நாட்டில் மேற்கொள்ளப்படும் மின்சக்தி, தொலைத் தொடர்பாடல், வீதிப் புனரமைப்புக்கள் போன்றன துரித அபிவிருத்தியடைந்துள்ளதாகவும், மகிந்த சிந்தனையின் வெற்றியை இந்த அபிவிருத்திப் பணிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில துறைகள் மக்களுக்கு முக்கியமானவையாகும். இவற்றை அரசு கட்டுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இவற்றின் அதிகாரங்களை அரசு எடுத்துக் கொள்ளாவிட்டால் எங்களால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது' என பஸில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்
Aucun commentaire:
Enregistrer un commentaire