mardi 6 novembre 2012

இந்தியா குத்துக்கரணம்! ஜெனிவாவில்


ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் செயற்பட்ட இந்தியா, அபாயப் பொறியிலிருந்து கொழும்பைக் காப்பாற்றி இறுதிநொடியில் அந்தர்பல்டி அடித்தது.
 
அதேசமயம் இலங்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்ளும் நாடுகள் குறித்து அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளன.
 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வுக்கூட்டம்  கடந்த வியாழக்கிழமை 
நடந்தபோது அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த இந்தியா இலங்கையில் 13 ஆவது அரசமைப்புத் திருத்த அமுலாக்கம், வடக்கு, கிழக்கின் இராணுவ முகாம்கள் அகற்றல் மற்றும் படைக்குறைப்பு, வடக்குத் தேர்தல் என்பன பற்றி காரசாரமாகக் கருத்து வெளியிட்டிருந்தது.
 
இலங்கை நிலைவரம் குறித்து ஆராய நியமிக்க ஐ.நாவால் நியமிக்கப்பட்டிருந்த குழுவில் ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் அங்கம் வகித்திருந்ததால் இந்தியாவின் அன்றைய கருத்து சர்வதேச மட்டத்திலும், மனித உரிமைகள் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
 
ஆனால், நேற்று இலங்கை தொடர்பில் நடைபெற்ற இறுதிக்கூட்டத்தில், இலங்கை தொடர்பில் ஏற்கனவே முன்வைத்த சிபாரிசுகளை நீக்கியிருந்த இந்தியா அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் அந்தர்பல்டி அடித்தது நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெனீவாவில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டுள்ள இலங்கை தூதுக்குழுவினர் இந்தியப் பிரதிநிதிகளைச் சந்தித்து சந்தித்து நடத்திய இரகசியப் பேச்சுகளை அடுத்தே இந்தியா தனது நிலைப்பாட்டை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டதாக இராஜததந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இதற்கிடையில் நேற்றையக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் சில நாடுகள் முன்னுக்கு பின் முரணாக நடந்துகொள்ளும் நாடுகள் குறித்து கடும் கவலை வெளியிட்டன.
  
இதேவேளை, நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சாதகமான பிரதிபலிப்பை இலங்கை அரசு இன்னும் இரு வாரத்துக்குள் அறிவிக்குமென்று குறிப்பிட்டார்.
 
எவ்வாறாயினும் எதிர்வரும் மார்ச் மாத அமர்வுக்குள் இலங்கை அரசு மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று ஜெனீவாவிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் எம்மிடம் சுட்டிக்காட்டின.
 
இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இன்று நடைபெற்ற பூகோள கால மீளாய்வு அமர்வில் இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 100 பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
 
கடந்த முதலாம் நாள் நடைபெற்ற விவாத்தின்போது 99 நாடுகளும் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில், இந்த மூன்று நாடுகளும் இணைந்து 210 பரிந்துரைகள் அடங்கிய தீர்மான அறிக்கையை நேற்று சமர்ப்பித்திருந்தன.
 
இந்த அறிக்கையை ஐ.நாவுக்காக ஸ்பெய்ன் தூதுவர் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், 100 பரிந்துரைகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தப் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை இலங்கை விவரித்துள்ளது.
அதேவேளை, பூகோள கால மீளாய்வுக் கூட்டம் குறிப்பிட்டதொரு நாட்டை இலக்கு வைத்து செயற்படுவதாகவும், இந்த நடைமுறைகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பிளவை ஏற்படுத்த முனைவதாகவும் கியூபா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
 
இந்தத் தீர்மானத்துக்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்துக்கு இலங்கை இரண்டு வாரங்களுக்குள் தனது உறுதிமொழிகளை அனுப்பும் என்று தெரிவித்துள்ளார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire