vendredi 23 novembre 2012

ஐ.தே.க. பெண் எம்.பி. விசனம்; பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு

news
மகளிர் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனங்கள் அனைத்திலும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. ஆனால், இங்குதான் பாலியல் வன்முறைகளும் சிறுவர் துஸ்பிரயோகமும் பெருமளவு அதிகரித்துள்ளன; பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறு  ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரோஸி சேனநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் அவர் உரையாற்றினார்.

அவர் தெரிவித்ததாவது 2009, 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 9,482 பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. 8,431 சிறுவர் துஸ்பிரயோகங்களும், மகளிர் மற்றும் சிறுவர்கள் மீதான 15,138 வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

ஒட்டுமொத்தமாக இக்காலப்பகுதியில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாலியல் சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது. நாட்டின் சனத்தொகையில் ஆறுசதவீதமான பெண்கள் இளம் வயதில் கர்ப்பம் அடைந்துள்ளனர்.

இவற்றைக் கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நாடாளுமன்றத்திலும் பல பெண் உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால் மகளிர் விவகார அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும் ஆண்களே இருக்கின்றனர் என்பதும் கவலைக்குரியது.

வடக்கு கிழக்கில் 89 ஆயிரம் விதவைகளும் தென்பகுதியில் 30 ஆயிரம் விதவைகளும் இருக்கின்றனர். இந்த வரவு செலவுத்திட்டத்தில் இவர்களுக்கான உதவிகள் வழங்கப்படவில்லை.

தேசிய வருமானத்தில் பெரும் பகுதியை வெளிநாடுகளில் பணிப்பெண்களாகத் தொழில் செய்யும் பெண்களும், பெருந்தோட்டப் பெண்களுமே பெற்றுத்தருகின்றனர். ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான அபிவிருத்தி, தீர்மானம் எடுக்கும் தன்மை,  நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற அடிப்படையில் பெண்களுக்கான பாதுகாப்பு ஆகியன பரிசீலனை செய்யப்படவேண்டும்.

மஹிந்த சிந்தனையில் 25 சதவீதமான பங்களிப்பு பெண்களுக்கு வழங்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சபையில் கூட 13 பேர் மட்டுமே இருக்கின்றோம்.

நிர்வாக சேவையில் 8 சதவீதமான பெண்களே இருக்கின்றனர். மகளிர் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. சாசனங்கள் அனைத்திலும் இலங்கை கையெழுத்திட்ட போதிலும் இங்கு அவை பேணப்படவில்லை என்றும் ரோஸி சேனாநாயக்க கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire