samedi 24 novembre 2012

பேராசிரியர் ரவீந்திரன் விசனம்.பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் எதிராக ஊடகங்கள் செயற்படுகின்றன


வெகுசன ஊடகங்கள் அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் பிந்திய, எதிரான ஒரு பணியை வேகமாக செய்கின்றன என்று தெரிவித்த சென்னைப் பல்கலைக்கழக இதழியல்துறைப் பேராசரியரும் துறைத்தலைவருமான முனைவர் கோபாலன் இரவீந்திரன் இதற்கு அரசாங்கமே பொறுப்பு என தனது விசனத்தை தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தந்தை பெரியார் அரங்கில் இடம்பெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறையும் மானுடவியல் துறையும் துளிர் சிறுவர்களுக்கான அறிவியல் பத்திரிகையும் இணைந்து நடத்திய இந்திய அறிவியல் பத்திரிகைகளின் முன்னுள்ள சவால்கள் என்ற கருத்தரங்கில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
அவர் அங்கு மேலும் உரையாற்றும் பொழுது தமிழக வெகுசன ஊடகங்கள் சமூதாயத்திற்குப் புறம்பாகவும் பகுத்தறிவுக்கு புறம்பாகவும் செயற்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் வெகுசன ஊடகங்கள் இதே அளவில்தான் இயங்கின. தமிழகத்தில் ஊடகம் மோசமான நிலையடைய பல காரணிகள் உள்ளன.
இரண்டு மூன்று வருடங்களின் முன்பு கோடம்பாக்கத்தில் தொடர் கொலை நடந்த பொழுது ஒரு தமிழக வார இதழ் சைக்கோ கொலை என்று ஒரு வருடமாக எழுதியது. தமிழ் பத்திரிகையின் சொல்லாடல்களைப் பார்த்தால் மிக்க வருத்த்திற்குரியதாக உள்ளன. எல்லாக் கொலைகாரரும் சைக்கோ என்று சொல்லுவதோடு குழந்தையையும் முதியவரையும்கூட சைக்கோ என்றும் நமது ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.
ஒரு பத்திரிகை விபச்சாரம் செய்யும் பெண்ணை அழகி என்று சொல்லும் சொல்லலை தனக்கு சொந்தமாக்கியிருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காக செய்யும் தொழிலை அழகியலாக்கி செய்தி வெளிட்ட பெருமை நமக்கு உண்டு. நித்தியானந்தாவை உருவாக்கியதும் ஊடகங்கள்தான். அதே நித்தியானந்தாவை நித்தி என்று கேலி செய்வதும் ஊடகங்கள்தான். கூடங்குளம் பற்றிய பல உண்மைளை மறைக்கும் வேலையையும் நமது ஊடகங்கள்தான் செய்கின்றன.
எந்த வகையில் பாத்தாலும் வெகுசன ஊடகங்கள் அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் பிந்திய எதிரான ஒரு பணியை வேகமாக செய்கின்றன. இவைகளுக்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டுமா என்றும் இதில் நமக்கு என்ன பாத்திரம் இருக்கிறது என்றும் நாம் கருதவேண்டியிருக்கிறது. இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணம் நாம் மட்டுமல்ல, நமது ஊடகங்கள் மட்டுமல்ல அரசங்கமும்தான்.
அறிவியல் சார்ந்த கருத்தும் பகுத்தறிவு சார்ந்த கருத்தும் மக்களுக்கு கிட்டக்கூடாது என்று முனைப்போடு பல காரணிகள் செயற்படுகின்றன. முக்கியமான காரணி அரசாங்கம் என்பதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
2012 இல் தர்மபுரியில் நடந்த சம்பவத்திற்கு நவீன தமிழகம் காரணமா? என்ன காரணம் என்று நாம் சிந்திக்க வேண்டும். நாம் ஜாதிய நிலப்புரபுத்துவ சமூகக் கட்மைப்புக்குள் தோய்ந்துபோனவர்கள். இந்த கட்டமைப்புக்குள் தோய்ந்துபோன மனம் அறிவியல் சார்ந்த பார்வையையும் பகுத்தறிவு சார்ந்த பார்வையையும் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? என்று  கேள்வி எழுப்பினார் பேராசரியர் இரவீந்திரன்

Aucun commentaire:

Enregistrer un commentaire