dimanche 3 février 2013

துருக்கி ஹோட்டலில் பின்லேடன் மருமகன் சி.ஐ.ஏ. அவரை பின்தொடர்ந்தது.


உளவு வட்டாரத் தகவல்களின்படி, ஒசாமா பின்லேடனின் மருமகன், துருக்கி தலைநகர் அங்காராவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அங்காராவில் மறைந்திருக்கும் இடம் பற்றி சி.ஐ.ஏ. உளவுத் தகவல் கொடுத்ததை அடுத்தே, துருக்கி உளவுத்துறையினர் இவரை கைது செய்துள்ளனர்.
தற்போது கிடைத்த தகவல்களின்படி, பின்லேடனின் மருமகன் சுலைமான் அபு கீய்த் (மேலே போட்டோவில் உள்ளவர்), செப்டெம்பர் 11 தாக்குதலின் பின் ஆப்கானிஸ்தானில் இருந்து மாயமாக மறைந்து போனார்.
சுலைமான் அபு கீய்த் (தற்போது கைது செய்யப்பட்டவர்), பின்லேடன், அய்மன் அல் ஜவாகிரி (அல்-காய்தாவின் தற்போதைய தலைவர்)
சுலைமான் அபு கீய்த் (தற்போது கைது செய்யப்பட்டவர்), பின்லேடன், அய்மன் அல் ஜவாகிரி (அல்-காய்தாவின் தற்போதைய தலைவர்)
இவர் எவ்வளவு முக்கிய புள்ளி? இதோ பக்கத்தில் உள்ள போட்டோவை பாருங்கள். அல்-காய்தா தலைவர் பின்லேடன், துணை தலைவர் அய்மன் அல்-ஜவாகிரி, ஆகியோருடன் அமர்ந்திருப்பவர்தான், பின்லேடனின் மருமகன் சுலைமான் அபு கீய்த்.
சுருக்கமாக சொன்னால், பின்லேடன் மறைவுக்கு பின் அல்-காய்தாவில், ஜவாகிரிக்கு அடுத்தபடி,  இரண்டாம் இடத்தில் உள்ளவர்.
சி.ஐ.ஏ. இவரை தேடோ தேடென்று தேடியும் கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த உளவுத் தகவல்களின்படி, ஈரான் அரசு இவருக்கு பாதுகாப்பு கொடுத்தது என தெரிய வந்தது.
ஈரானிய ராணுவ முகாம் வளாகம் ஒன்றில் பலத்த பாதுகாப்புடன் கூடிய மாளிகை ஒன்றில் இவர் வசித்து வந்ததாக தகவல் இருந்தது.
அதன்பின், சமீபகாலமாக இவர் வெளிநாடுகளுக்கு போய் வரத் தொடங்கிய தகவல் சி.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது. அபுதாபி, மற்றும் துபாய் சென்றுவந்த விபரங்கள் கிடைத்தன. ஆனால், சி.ஐ.ஏ. அலர்ட் ஆகுமுன், அவர் அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தார்.
சில தினங்களுக்கு முன் துருக்கியில் உள்ள சி.ஐ.ஏ. ஸ்டேஷன் சீஃப், சுலைமான் அபு கீய்த் துருக்கியில் சில தொடர்புகளை வைத்திருக்கும் தகவலை தெரிவித்தார். இதையடுத்து, அங்காரா ஏர்போர்ட் சி.ஐ.ஏ.வின் ரகசிய கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தது.
பயணிகள் விமானம் ஒன்றில், சாதாரண பயணிபோல, போலி பாஸ்போர்ட் ஒன்றில், வேறு பெயரில் சுலைமான் அபு கீய்த் அங்காரா சென்று இறங்கியதை சி.ஐ.ஏ. ஏஜென்டுகள் நோட் பண்ணினார்கள் அதுவரை இந்த விபரங்கள் ஏதும், துருக்கி அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை. அங்காரா விமான நிலையத்தில் சி.ஐ.ஏ. கண்காணிப்பு வேலைகள் செய்ததும் துருக்கிக்கு தெரியாது.
துருக்கிக்குள் சென்ற சுலைமான் அபு கீய்த், அங்காராவின் கான்கயா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கினார். அதுவரை சி.ஐ.ஏ. அவரை பின்தொடர்ந்தது.
அதன்பின் சி.ஐ.ஏ., துருக்கி உளவுத்துறை MIt-க்கு விஷயத்தை தெரிவித்தது. உடனடியாக ஹோட்டலை முற்றுகையிட்ட துருக்கி உளவுத்துறை, சுலைமான் அபு கீய்த்தை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சுலைமான் அபு கீய்த், பின்லேடன் இருந்த காலத்தில் அல்-காய்தாவின் பிரதான செய்தித் தொடர்பாளராக இருந்தவர். பின்-லேடனின் வீடியோ பேட்டிகள் எல்லாமே, இவரது ஏற்பாட்டிலேயே அல்-ஜசீரா டி.வி. சேனலுக்கு சென்றன.
பின்லேடனின் மகள் பாத்திமா பின்லேடனின் கணவர் இவர். குவைத் பிரஜையான சுலைமான் அபு கீய்த், அல்காய்தா செய்தி தொடர்பாளராக இருந்த காரணத்தால், அவரது பிரஜாவுரிமையை பறித்துக் கொண்டது குவைத் அரசு. பாத்திமா பின்லேடன் தற்போது சவுதி அரேபியாவில் வசிக்கிறார்.
சுலைமான் அபு கீய்த் கைது பற்றி, துருக்கி அரசோ, சி.ஐ.ஏ.வோ இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை. ஆனால், உளவு வட்டாரங்களில் இருந்து எமக்கு கிடைத்த தகவல்கள், கைது பற்றி உறுதி செய்கின்றன. நிச்சயமாக இவர் துருக்கி உளவுத்துறையின் கைகளில் உள்ளார். சி.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது சரியாக தெரியவில்லை.
இதற்குள் மற்றொரு விஷயமும் உள்ளது.
துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நேற்று (வெள்ளிக்கிழமை), தற்கொலை தாக்குதல் ஒன்று நடந்தது. அமெரிக்க தூதரக வாசல்வரை சென்ற ஒரு நபர், வாசலை தாண்டி உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், தனது உடலில் இருந்த குண்டை வெடிக்க வைத்தார். ஒரு பாதுகாப்பு அதிகாரியும் அந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
துருக்கி தலைநகர் அங்காராவில் அமெரிக்க தூதரகம்மீது நேற்று அந்த தாக்குதல் நடந்ததற்கும், ஈரானில் வசித்துவந்த பின்லேடனின் மருமகன், அதே அங்காரா நகருக்கு வந்ததற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை.

Aucun commentaire:

Enregistrer un commentaire