vendredi 10 janvier 2014

கோத்தபாய ராஜபக்ஷவின் மற்றுமொரு சட்டவிரோதமான ஆயுத விற்பனை வியாபாரம்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மற்றுமொரு சட்டவிரோதமான ஆயுத விற்பனை வியாபாரம் தொடர்பான தகவல்கள் சர்வதேச புலனாய்வாளர்களுக்கு தெரியவந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை வழங்கி வந்த ஆயுத விற்பனையாளர்களுடன் கோத்தபாய இந்த வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இது மிகவும் ஆபத்தான செயற்பாடு எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செக் குடியரசில் வசிக்கும் யோகராஜா என்பவர் கோத்தபாயவுடன் இணைந்து இந்த சட்டவிரோத ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
மேற்படி நபர் யோகராஜா என குறிப்பிடப்பட்டாலும் உண்மையான பெயர் தெரியவில்லை. கே.பி மூலமாக ஏற்பட்டுள்ள இந்த தொடர்புடன் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்தனவும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
செக் குடியரசில் உள்ள யோகராஜாவை, பாதுகாப்புச் செயலாளரின் முகவரான முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் சந்தித்துள்ளார்.
கடந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சந்தித்துள்ள இவர்கள் சட்டவிரோதமாக ஆயுதங்களை சில தடவைகள் கப்பல்களில் ஏற்றி இறக்கியுள்ளனர்.
இவர்கள் அண்மையில் செக் குடியரசில் இருந்து ஆயுதங்களை எடுத்து வந்து, கிரோக்கத்தில் உள்ள துறைமுகத்தில் இருந்து இந்து சமுத்திர பகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். விடுதலைப் புலிகளும் கடந்த காலங்களில் இந்த வழியாகவே ஆயுதங்களை இலங்கைக்கு எடுத்துச் சென்றனர்.
ஆயுத கொள்வனவு தொடர்பான விடயத்திற்காகவே கோத்தபாய அண்மையில் இஸ்ரேல் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கோத்தபாய தனது இத்தாலி விஜயத்தின் போது ரிமினி என்ற கடற்கரை நகரில் யோகராஜா என்பரின் முகவரை சந்தித்து பேச்வார்த்தை நடத்தியுள்ளார். இதில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் ஒருவர் கலந்து கொண்டதாக தெரியவருகிறது.
இதற்கு முன்னர் கோத்தபாயவினால் இரகசியமான முறையில் கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் அடங்கிய கப்பல் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பிடிப்பட்டதுடன் இலங்கையினால் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி அந்த கப்பல் விடுவிக்கப்பட்டது.
எனினும் இலங்கை அரசாங்கம் அப்படியான ஆயுதங்களை இறக்குமதி செய்யவில்லை என்பது பின்னர் தெரியவந்தது.
கோத்தபாயவின் சட்டவிரோத ஆயுத விற்பனை தொடர்பில் ஐரோப்பிய மற்றும் இந்திய புலனாய்வு பிரிவினர் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire