mercredi 22 janvier 2014

பல்லாயிரம் கொலைகள் நிகழ்ந்ததாக கூறுகின்ற ஒரு இனம் அதன் சூத்திரதாரிக்கு எப்படி பெரும்பான்மை வாக்குகளை அளிக்கமுடியும்?

bishops+tamilselvanஎதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை நிலைமைகளை மதிப்பீடு செய்து கொள்ள முடியும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
அதே வேளை கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பிடம் இறுதிக்கட்டப் போரின் போது, இடம்பெற்றதாக சொல்லப்படும் யுத்த குற்றங்கள் பற்றி பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மட்டுமன்றி ஆயர்களும் இணைந்து இலங்கை அரசு மீது கடுமையான குற்றசாட்டுகளை தெரிவித்துள்ளனர்.சிறிலங்கா படையினரால் வீசப்பட்ட கொத்தணிக் குண்டுகள் விமானக்குண்டுகள், இரசாயனக் குண்டுகளாலேயே, அதிகளவு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் போர்க்குற்ற விவகார நிபுணரிடம் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் முறையிட்டுள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த குற்றசாட்டுக்கள் எதுவும் புதியவையல்ல.இவற்றில் மிகைப்படுத்தல்கள் இருந்தாலும் அடிப்படையில் இறுதி யுத்தத்தின் போது மக்கள் வகைதொகையின்றி இறக்க நேரிட்டது என்பது பொய்யானதல்ல.ஆனால் இந்த குற்றசாட்டுகளை அரசு கடந்த  ஐந்து வருடங்களாக இலங்கை அரசு எதிர்கொண்டு வருவதுடன் அவற்றை வெற்றிகொண்டெ வருகின்றதென்பதும் கவனிக்கத்தக்கது. இந்தநிலைமைக்கு காரணங்கள் பல காரணங்கள் உண்டு.எந்த இறுதி யுத்தத்தில் மக்கள் மீது படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது என முறையிடப்படுகின்றதோ அந்த யுத்தத்தை முன்னின்று நடாத்திய ஜெனரல் சரத் பொன்சேகாவை நாட்டின் ஜனாதிபதியாக்க 2010ல்  தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவே முதன்மையான காரணியாகும்.
தம்மீது பல்லாயிரம் கொலைகள் நிகழ்ந்ததாக கூறுகின்ற ஒரு இனம் அதன் சூத்திரதாரிக்கு எப்படி பெரும்பான்மை வாக்குகளை அளிக்கமுடியும்? நாட்டினுள்ள இருபத்தி இரண்டு மாவட்டங்களில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பதினெட்டு  மாவட்டங்களிலும் தோல்வியடைந்த பொன்சேகாவுக்கு வடக்குகிழக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தமிழர் கூடுதலாக வாழும் நுவரெலியாவிலும் மட்டுமே வெற்றி கிடைத்தது.கூட்டமைப்பினரின் அரசியல் சூனியமான இந்த முடிவுதான் இலங்கை அரசின் மேலான யுத்தகுற்றங்களை சர்வதேச ரீதியில் நீர்த்துப்போக செய்த முதற்காரணி ஆகும்.தமிழ் மக்களின் அரசியல் வழிகாட்டிகளான யாழ்ப்பாண பெருகுடிகள் (63 வீத) 113877 வாக்குகளை அளித்து சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க முயன்றனர்.இறுதியுத்தம் நடந்த படு கொலைகள் நடந்த வன்னி மாவட்டத்தில் (66 வீத) 70367 வாக்குகள் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்டது. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற அந்த சரத் பொன்சேகா  தலைமையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடந்தது என கூறுவதை உலகில் எந்த மடையன் நம்புவான்?    இந்த மடத்தனத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பல்லாயிரம் ஆண்டு சென்றாலும் பரிகாரம் தேடமுடியாது.
இவை ஒருபுறம் இருக்க சர்வதேச யுத்த குற்றம் பற்றிய தீர்ப்பாயம் சம்பந்தமான ரோம் ஒப்பந்தத்தில் இலங்கை பங்கெடுக்காமை ஐக்கிய நாடுகள் சபையின் வீட்டோ அதிகாரம் மிக்க ரஷ்யா ,சீனா போன்ற நாடுகளை தமிழர் தரப்பினர் இன்றுவரை வெற்றிகொள்ள முடியாதிருக்கும் கையாலாகாத்தனம்,போன்ற பல விடயங்கள் இலங்கை அரசுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றன.எனவே மீண்டும் மீண்டும் இந்த யுத்த குற்றங்களை பேசிபேசியே தமிழர் தரப்பு காலத்தை கடத்துவதும்  அப்பாவி மக்களை ஜெனிவா கனவுகளில் மிதக்க செய்வதும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயலேயாகும். போதாமைக்கு வடமாகாண சபையை கொண்டு நடத்த முடியாது திணறுகின்ற கூட்டமைப்பினர் இன்னும் மூன்று மாத காலத்துக்கு காலம் கடத்த இந்த ஜெனிவா கதையளப்பு கைகொடுக்கும்.
இந்த லட்சணத்தில் இருக்கும் அரசியல் வாதிகள் போதாதென்று எமதுsarath fonseka-1ஆயர்களும் இப்போது முழுநேர அரசியல் வாதிகளாகி விட்டனர். இலங்கை பிரச்சனைக்கும் இந்த ஆயர்களுக்கும் அன்றிலிருந்து இன்றுவரை நல்ல நெருக்கம் என்பதை இலங்கை அரசியல் தகவல்களில் பரிச்சயமானவர்கள் மறுக்கமாட்டார்கள்.அன்று சிங்கராயர்,சின்னராசா,மட்டக்களப்பு ஜோசெப் மேரி தொடங்கி இன்று இம்மானுவேல், ஜெகத் கஸ்பார், இராயப்பு ஜோசேப்பு   வரை இந்த பட்டியல் நீளுகிறது. புலிகளின் தாகம் தமிழீழ தாயகமே என்று ஒற்றை கொடிபிடிக்கும் நெடியவனின் ஆலோசகராக செயற்படும் இம்மானுவேலுக்கு சற்றும் தளராத வகையில் அமெரிக்காவின் போர்க்குற்ற விவகார நிபுணருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள் இந்த இலங்கை வாழ் ஆயர்கள்.பாவங்களை மன்னிக்க பிறந்த யேசுபிரானின் வார்த்தைகளை பிரசங்கிக்கின்ற இந்த உபதேசிகள் மக்கள் மறந்தாலும் நாம் விடுவோமோ என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர். ஆனால் மக்கள் ஆயிரக்கணக்கில் இறப்பதற்கு காரணமான புலிகளையிட்டு மட்டும் ஏனோ இவர்களிடம் இந்த ஆவேசம் இருப்பதில்லை குழந்தைகளின் கைகளில் புலிகள் வெடிகுண்டுகளை திணித்த பொழுதுகளிலும்இபல்லாயிரம் மக்களை மனித கேடயங்களாக தடுத்துவைத்து பலியிட்ட பொழுதுகளிலும்  பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்கள் பாவங்களை மன்னியுமென்று மன்றாடியிருப்பார்கள்  போலும்.
சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றுதான் கர்த்தரின் வார்த்தைகள் சொல்கின்றன.ஆனால் நமது பாதிரிகளோ சமாதானத்துக்கு கேடு விளைவிக்கின்றார்களே?   பழிவாங்கலும் வஞ்சம் தீர்த்தலும்  நாட்டில் மீண்டும் மீண்டும் குரோதங்களையே விளைவிக்கும் என்பதை இவர்கள் அறியாதிருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை.அந்த பரமபிதாவை விட அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய விசுவாசத்தில் திளைத்திருக்கிறார்கள் இந்த உபதேசிகள்.கர்த்தரின் வார்த்தைகளைவிட இந்த ஏகாதிபத்திய சாத்தான்களின் அப்பங்கள் இந்த பாதிரிகளுக்கு நித்திய ஜீவனளிக்கின்றதா? அமேரிக்கா தலையிட்டு எந்த நாட்டில் சமாதானம் வந்தது? ஐரோப்பா ஆயுதங்கள் விற்காத தேசம் ஏதேனும் இம்மண்ணுலகில் உண்டா?   என்று  இந்த பாதிரிகள் மக்களுக்கு சொல்ல வேண்டும்.அயலவனை நேசி என்று தேவன் சொல்ல மனித வெடிகுண்டு மட்டுமே மானிடவிடுதலையை வென்றுதரும் என்றுதானே புலிகள்  சொன்னார்கள். தேவனின் ஆலயத்தை   வியாபாரிகள் தங்களுக்குரியதாய் பங்கு போட்டுகொண்டபோது அந்த யேசுபிரானுக்கே  கோபமுண்டயிற்றே,ஆனால் மடுமாதா தேவாலயத்தின் சுரூபத்தையே களவாடி சென்றார்களே புலிகள்.இந்த  பாவங்களுக்கெல்லாம் தங்களிடம்  பாவசங்கீர்த்தனம் செய்த புலித்தலைவர்கள் எவரேனும் உண்டா? என்பதை இந்த ஆயர்கள் ஒப்புவிக்க வேண்டும்.
இந்த பாதிரிகளின் பாவங்கள்  இப்போது மட்டக்களப்பிலும் அதிகரித்து வருகின்றது.புலிகள் பிரிந்தபோது வன்னிபுலிகள் செய்த அத்தனை கொலைகளையும் மறைக்கும் முயற்சியில் திட்டமிட்ட சதியொன்றை இவர்கள்  மேற்கொண்டு வருகின்றார்களோ என்று எண்ண தோன்றுகிறது.எந்த மார்ச் மாதத்தில் இவர்கள் ஜெனிவா கனவு காணுகிறார்களோ அதே மார்ச் மாதத்தில் கிழக்கு மாகாணத்தில் நடந்த தொடர் படுகொலை ஒன்றை இவர்கள் எண்ணிபார்ப்பதேயில்லை.புலிகள் பிளந்த போது வெருகலாற்றில் சரணடைந்த போராளிகள் மீது  இடம்பெற்ற படுகொலையை எண்ணி ஒருபோதும் இந்த பாதிரிமார் மனம் வருந்துவதில்லை.புலிகளின் பிளவினால் தமக்கு விரோதமாகிவிட்டார்கள் என பிரபாகரன் விடுத்த கட்டளையிநிமித்தம் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் அளவு கணக்கற்றவை.சச்சு மாஸ்டர் மட்டகளப்பு சிறைக்குள்ளே வைத்து சுடப்பட்டார்.நித்திரைபாயில் வைத்து ரெஜி கொல்லப்பட்டார். கொழும்புக்கு தப்பியோடிய குகனேசனையும் மற்றைய போராளிகளையும்  கொட்டாவையில் வைத்து நஞ்சூட்டிகொன்றார்களே புலிகள்.catholic-church-prabhakaran
அதுமட்டுமா  அக்கரைப்பற்று நீதிமன்றில் புகுந்தும் புலிகள் கொலை செய்தார்கள்.பொட்டம்மான் என்னும் சாத்தானுக்கு அஞ்சி தங்களை தாங்களே ஒப்படைத்து சரணடைந்த நிலாவினியுடனான நான்கு ஸ்திரிகளையும் உங்கள் பாதிரியார் ஒருவர் தானே புலித்தளபதி ரமேஷிடம் கையளித்தார்.அவர்கள் உயிருக்கு என்ன நடந்தது என்பதை அறிய என்றாவது நீங்கள் சித்தம் கொண்டதுண்டா?இவைகள் எல்லாம் எந்த யுத்த தர்மத்தின் பாற்பட்டவை என்பதை இந்த உபதேசிகள் விளக்க வேண்டும்.அவை எல்லாம் போராளிகளுக்குள் நடந்தவை என்று பாதிரிகள் ஒதுங்கிகொள்ள கூடும் ஆனால் மட்டகளப்பு தொழில்நுட்ப கல்லூரி அதிபர்  தில்லைநாதன் சோறு அள்ளிய கரங்களுடன் கொன்று வீசப்பட்டாரே அதையிட்டு இந்த பாதிரிமார் என்றாவது கவலைகொண்டதுண்டா? கிங்ஸ்லி இராசநாயகம் எம்பி கொல்லப்பட்டமை எந்த நியாயபிரமாணங்களுக்கு உட்பட்டது போதகர்களே?  அனைத்துக்கும் மேலாக இராஜன் சத்திய மூர்த்தியை கொன்றது மட்டுமன்றி அவரது பிரேதத்தை தோண்டியெடுத்து வஸ்திரங்களை கழற்றி வன்மம் கொண்டாடி மகிழ்ந்தார்களே வன்னிபுலிகள் இதையிட்டு இன்று நீதிமான்களாக வேசமிடும் எந்த பாதிரிமார் குரல்கொடுத்தார்கள்? இவையனைத்துக்கும் நியாயதீர்ப்பு எப்போது வழங்கப்படும்.அதை சொல்லிவிட்டு ஜெனிவாவுக்கு அடிக்கும் உங்கள் பெட்டிசங்களை தொடருங்கள்.                          மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்

Aucun commentaire:

Enregistrer un commentaire