dimanche 26 janvier 2014

மஹிந்த அரசுடன் இணைந்து செயற்பட த.தே.கூ. தயார்!சம்பந்தே மிகுந்த ஆர்வம்;தம்பிமுத்து

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதியைச் சந்தித்துரையாடிய மட்டு. மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
தனது காலத்தினுள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சம்பந்தன் அவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளார் எனவும் பிரதேச அபிவிருத்திக்கும், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் அரசுடன் ஒத்துழைப்பது அவசியமானதே என்பதை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்ட அருண் தம்பி முத்து, எனினும் தமிழ் மக்களில் ஒரு சிறு பிரிவினர் தனக்குத் துரோகி என மக்கள் பட்டம் சூட்டிவிடுவார்கள் எனும் பயத்தினாலேயே அவர் இவ்விடயத்தில் பின்னிற்பதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
சம்பந்தன் அவர்களின் எண்ணப் போக்கை வரவேற்ற ஜனாதிபதி, இணக்க அரசியலை மேற்கொண்டால் அதனூடாக வடக்கு, கிழக்கைக் கட்டியெழுப்பி, தமிழ் மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்த அவர்கள் சேவை செய்யலாம் எனவும் தெரிவித்ததாகவும் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடத்தப்பட உள்ளது.
வடக்கின் தற்போதைய நிலைமை, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாடு போன்றன தொடர்பில் விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
இந்த வாரத்தில் இரு தரப்புக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பெப்ரவரி மாத முதல் வாரத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். இந்திய உயர் மட்ட அரசியல் தலைவர்களுடன் சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் குழு சந்திப்பு நடாத்த உத்தேசித்துள்ளது.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire